AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

4 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா உக்ரைன் போர்.. சமரச முயற்சியில் களமிறங்கும் இந்தியா

Russia Ukraine War: ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதேநேரத்தில், போரை நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

4 ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா உக்ரைன் போர்.. சமரச முயற்சியில் களமிறங்கும் இந்தியா
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Oct 2026 14:41 PM IST

அக்டோபர் 7, 2026: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், மூன்று அம்சங்களைக் கொண்ட போர் நிறுத்தத் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியா அதிக பங்கு வகிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் போர் நிறுத்தத் திட்டத்தில் எரிசக்தி கட்டமைப்புகள், கருங்கடல் வழியாக வர்த்தகக் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புகள் தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த மாதம் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உக்ரைன் சென்றிருந்தபோது, இந்தியா இந்தத் திட்டத்தை உக்ரைனிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், இந்தியாவிடம் இருந்து இதுபோன்ற ஒரு திட்டம் கிடைத்துள்ளதாகவும், ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டுவர முன்வைக்கப்பட்டுள்ள நான்கு சர்வதேச முயற்சிகளில் இந்தியாவின் திட்டம் விரிவானதாக இருப்பதாகவும் தெரிவித்தார். துருக்கி, எகிப்து மற்றும் அமெரிக்காவிடமிருந்தும் உக்ரைனுக்கு போர் நிறுத்தம் தொடர்பான முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தியாவின் 3 அம்ச திட்டம் என்ன?

இந்தியாவின் திட்டத்தின்படி, எரிசக்தி நிலையங்கள் மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது, கருங்கடல் துறைமுகங்கள் வழியாக தானியங்கள் மற்றும் எரிசக்தி வளங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வது, கருங்கடல் வழியாக செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

மேலும் படிக்க: பிரான்சிஸ் ஹால்சனுக்கு 2026 இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு – யார் இவர்?

எகிப்து மற்றும் துருக்கி முன்வைத்துள்ள திட்டங்கள் பெரும்பாலும் கருங்கடல் வழியாக தானியங்கள் தடையின்றி கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதிலும், வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதிலும் கவனம் செலுத்துகின்றன. அதேநேரத்தில், அமெரிக்காவின் திட்டம் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. அதேநேரத்தில், போரை நிறுத்த வேண்டும் என்றும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கூறுகையில், இந்தியா வெறும் கருத்துகளைத் தெரிவிப்பதைத் தாண்டி, மோதல்களைக் குறைப்பதற்காக மாஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு தரப்புடனும் நடைமுறை சார்ந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல ப்ளான்.. நாகை துறைமுகத்தில் சிக்கிய பெண்.. குடியுரிமை அதிகாரிகள் அதிரடி!

கருங்கடல் வழியாக நடைபெறும் வர்த்தகக் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது முதல் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவது வரை பல்வேறு முன்மொழிவுகள் குறித்து இரு தரப்பினருடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான நீண்டகால பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் காரணமாக, போரில் ரஷ்யாவை இந்தியா நேரடியாக விமர்சிப்பதைத் தவிர்த்து வருகிறது. அதேவேளையில், போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us