தற்காலிக போர் நிறுத்தத்த்தை நீட்டிக்க அமெரிக்கா – ஈரான் பரிசீலனை?
America - Iran Ceasefire | ஈரான் மீது இரண்டு வாரங்களுக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், தற்போது போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்ரல் 16 : ஈரான் மற்றும் அமெரிக்கா (Iran and America) இடையே தற்போது அமலில் உள்ள போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அறிவிக்கப்பட்ட இரண்டு வார போர் நிறுத்ததிற்கான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் நிறுத்தத்தை நீட்டிப்பது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தோல்வியில் முடிந்த அமைதி பேச்சுவார்த்தை
பாகிஸ்தான் பரிந்து பேசியதன் காரணமாக அமெரிக்கா, ஈரான் மீது இரண்டு வாரங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம் என அறிவித்தது. இந்த போர் நிறுத்தத்திற்கு இடையே இரு நாடுகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அது தோல்வியில் முடிந்தது. குறிப்பாக அணுசக்தி திட்டம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை ஆகியவற்றில் எந்த வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதையும் படிங்க : மீண்டும் போர் வாய்ப்பு?! தோல்வியில் முடிந்த அமெரிக்கா- ஈரான் பேச்சுவார்த்தை.. நடந்தது என்ன?
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக ஈரான் – அமெரிக்கா
இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஈரானில் உள்ள துறைமுகங்களை முற்றுகையிடுவதாக டிரம்ப் அறிவித்தார். இதன் மூலம் ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இந்த நிலையில் தான், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மற்றும் ஈரான் ஒப்புக்கொண்டுள்ளன. இன்று (ஏப்ரல் 16, 2026) நடத்த திட்டமிடப்பட்டுள்ள இந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : நிலவை நோக்கிய பயணத்தில் புதிய வரலாறு.. பத்திரமாக பூமிக்கு திரும்பிய ஆர்டிமிஸ் 2 விண்வெளி வீரர்கள்
2 புதிய நிபந்தனைகளை வெளியிட்ட அமெரிக்கா
ஈரான் உடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னதாக அமெரிக்கா, ஈரானுக்கு இரண்டு புதிய நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது. அதாவது ஹோர்முஸ் நீரிணையை எந்தவித கட்டுபாடுகளும் இல்லாமல் முழுவதுமாக திறக்க வேண்டும். அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு ஈரானின் தூது குழு அந்த நாட்டின் புரட்சிகர ராணுவ பாதுகாப்பு படையின் முழுமையான அதிகாரத்தை பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.