வாட்ஸ்அப்பின் புதிய Voice Chat வசதி: இனி டைப் செய்ய வேண்டாம்… ஈஸியா பேசலாம்!
WhatsApp Group Voice Chat Feature : வாட்ஸ்அப் அதன் யூசர்களின் வசதிக்காக புதிதாக குரூப் வாய்ஸ் சாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் முன்பு போல குரூப்களில் டைப் செய்து கஷ்டப்பட வேண்டியதில்லை. நேரடியாக வாய்ஸ் சாட் மூலம் நண்பர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடலாம்.

உலக அளவில் 3.5 பில்லியனுக்கும் அதிகமான யூசர்களைக் கொண்ட மாபெரும் மெசேஜிங் பிளாட்ஃபார்மாக இருக்கும் வாட்ஸ்அப் (WhatsApp), தனது பயனர்களுக்காக மேலும் ஒரு புதிய வாய்ஸ் சாட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி வாட்ஸ்அப்பில் குழு உரையாடல்களில் நேரடியாக பேசலாம். முன்பு நண்பர்களுடனான குரூப்பில் மெசேஜ் டைப் செய்தோ அல்லது வாய்ஸ் நோட் அனுப்பியோ பேச வேண்டியிருக்கும். இந்த முறைகளின் குறிப்பிட்ட நேரம் மட்டுமே பேச முடியும். நீண்ட நேர உரையாடல்கள் செய்ய முடியாது. அந்த வகையில் தற்போது வாய்ஸ் சாட் வசதியில் நண்பர்களுடன் நீண்ட உரையாடல்களை மேற்கொள்ள ஏதுவாக இந்த வாய்ஸ் சாட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப்பில் புதிய Voice Chat வசதி
அந்த வகையில் இனிமேல் நீண்ட மெசேஜ்களை குழுவில் டைப் செய்வதற்கான அவசியமே இல்லை. வாட்ஸ்அப்பின் புதிய Group Voice Chat வசதியின் மூலம், நீங்கள் உங்கள் குழுவில் நேரடியாக பேசலாம். நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது பணி சார்ந்து அலுவலகத்தில் சக ஊழியர்களோடு வாய்ஸ் சாட் மேற்கொள்ளலாம். உதாரணமாக உங்கள் நண்பர்கள் குழுவிடமோ, அல்லது உங்கள் சக பணியாளர்களிடம் வேலை சார்ந்து அறிவுறுத்தல்களை வழங்கவோ நீண்ட மெசேஜை டைப் செய்து கொண்டிருக்க தேவையில்லை. உங்கள் நண்பர்கள் இருக்கும் வாட்ஸ்அப் குரூப்பில் வாயஸ் சாட் வசதி மூலம் அனைவரையும் இணைந்து நீங்கள் சொல்ல வேண்டியதை பொறுமையாக சொல்லலாம்.
இந்த வசதி முதலில் பெரிய வாட்ஸ்அப் குரூப்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, 2-4 பேர் கொண்ட சிறிய குழுக்கள் முதல் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பெரிய குழுக்கள் வரை எல்லா வகையான குழுக்களுக்கும் இந்த வசதி விரிவாக வழங்கப்படுகின்றது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனாளர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. உங்களது மொபைலில் இன்னும் இந்த வசதி வரவில்லை என்றால், மேலும் அடுத்து வரக்கூடிய அப்டேட்டுகளில் கிடைக்கும். இது அனைத்து சாதனங்களிலும் பரவலாக பயனுள்ளதாக்கும் வகையில் அமைந்துள்ளது.




வாய்ஸ் நோட்டிற்கும் வாய்ஸ் சாட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பொதுவாக நாம் அனுப்பும் வாய்ஸ் நோட்டுகள் என்பது ஒரே ஒருவருக்காக பதிவுசெய்து அனுப்புவது. ஆனால் இந்த புதிய Voice Chat வசதி மூலம், குழுவில் உள்ள உறுப்பினர்கள் ஒரே நேரத்தில், நேரடி உரையாடலில் கலந்துக்கொள்ளலாம். இதற்காக குரூப் கால் செய்து அனைவரையும் இணைக்க தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ஸ் சாட்டில் இணைந்து உங்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளலாம். அதை தனியாக கால் செய்ய வேண்டிய அவசியமில்லை. விருப்பமில்லாதவர்கள் வாய்ஸ் சாட்டை தவிர்க்கலாம்.
வாட்ஸ்அப் தொடர்ந்து தனது பயன்பாட்டை எளிமையாகவும், அனைவருக்கும் ஏற்ற வகையிலும் மாற்ற முயற்சிக்கிறது. இந்த புதிய வசதி, அலுவலக சக பணியாளர்களுடன் உரையாடல், நண்பர்களுடன் சுற்றுலா பயண திட்டங்கள், பார்த்த திரைப்படங்கள் குறித்து பேச என பலவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.