டிரம்ப் பெயரில் போலி ஏஐ வீடியோ – கர்நாடகாவில் 200 பேரிடம் ரூ.2 கோடி மோசடி – அதிர்ச்சி சம்பவம்
Cybercrime through AI tools : ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மனிதர்களின் வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறது. மற்றொரு பக்கம் அதனைப் பயன்படுத்தி மோசடி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கர்நாடகாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெயரில் போலி ஏஐ வீடியோ மூலம் 200க்கும் மேற்பட்டோரிடம் ரூ.2 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றிருக்கிறது.

உலகம் முழுவதும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. மருத்துவம், கல்வி என முக்கிய துறைகளில் ஏஐ நுழைந்திருக்கிறது. ஒரு பக்கம் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கியிருக்கும் நிலையில் ஏஐ காரணமாக எதிர்காலத்தில் அதிக வேலை இழப்பு அபாயம் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தற்போது மோசடி செயல்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) போன்ற தோற்றத்தில் போலியாக உருவக்கப்பட்ட ஏஐ வீடியோவை பயன்படுத்தி கர்நாடகாவில் பல நகரங்களில் சுமார் 200 பேரிடம் சைபர் குற்றவாளிகள் மோசடி செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிாகியுள்ளது. இதுவரை ரூ.2 கோடிக்கு அளவுக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் போன்ற ஏஐ வீடியோ மூலம் மோசடி
சைபர் குற்றவாளிகள், டிரம்ப் ஹோட்டல் முதலீடு என்ற பெயரில் சமூக வலைதளங்களில் வீடியோ ஷார்ட்ஸ் மற்றும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளனர். இதில் டிரம்ப் ஹோட்டல் ரென்டல்ஸ் (Trump Hotel Rentals) என்ற பெயரில் அதிக வருமானம் கிடைக்கும் என பிரமிப்பூட்டும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த விளம்பரத்தை கிளிக் செய்தபோது ஒரு ஆப்பை டவுன்லோடு செய்ய மோசடியில் ஈடுபட்டவர்கள் சொல்லியிருக்கின்றனர். அதன் மூலம் வங்கிக் கணக்கு மற்றும் IFSC கோடு உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்பட்டிருக்கிறது.
செயலியில் உள்ள டாஸ்க்குகளை முடித்து வருமானம் கிடைக்கும் போல் காட்டப்பட்டது. முதலாவதாக ரூ.1,500 செலுத்தியவர்களுக்கு தினமும் ரூ.30 வீதம் கிடைத்திருக்கிறது. இதனால் நம்பிக்கை வந்தவர்கள் மேலும் ரூ.5,000 முதல் ரூ.1 லட்சம் வரை முதலீடு செய்திருக்கின்றனர். இறுதியில் முதலீடு செய்த பணத்தை திருப்பி அளிக்க வரி கட்ட வேண்டும் என பண் கேட்டிருக்கின்றனர். மேலும் அவர்கள் அளித்த பணமும் அவர்களுக்கு திருப்பி அளிக்கப்படவில்லை.




மோசடி நபரிகளிடம் சிக்கிய வழக்கறிஞர்
இந்த சம்பவம் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு பேட்டியளித்த ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான வழக்கறிஞர் ஒருவர், கடந்த ஜனவரி 25 முதல் ஏப்ரல் 4, 2025 வரை ரூ.5.93 லட்சம் இழந்ததாக கூறினார். ஆரம்பத்தில் ரூ.1,500 செலுத்தி, தினமும் ரூ.30 கிடைத்ததால் நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் அவரிடம் பெரும் முதலீடுகள் செய்ய சொல்லப்பட்டதோடு, கடைசியில் வரி கட்டச் சொல்லி அவருடைய பணத்தை திருப்பி அளிக்காமல் மோசடி செய்துள்ளனர்.
அவர் மேலும் கூறியதாவது, “இந்த மோசடியில் அரசு ஊழியர்கள், போலீசாரும் கூட சிக்கியுள்ளனர். ஒரு நாள் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அதே நாளில் ரூ.1 லட்சம் வந்துவிடும் எனக் கூறி ஏமாற்றினர். கர்நாடகா முழுவதும் மோசடி நடைபெற்றிருக்கிறது. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக ஹாவேரி மாவட்ட சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று பெங்களூரு, துமகூர், மங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும் பலர் புகார் செய்துள்ளனர்.