Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரபல நடிகரின் போலி ஏஐ வீடியோ – ஃபேஸ்புக்கில் ரூ.11 லட்சத்தை இழந்த பெண்

Deepfake video fraud : ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குளூனி போல உருவாக்கப்பட்ட டீப் ஃபேக் வீடியோவை உண்மை என நம்பி ஒரு அர்ஜென்டினா பெண் ரூ.11 லட்சத்துக்கும் அதிகமான தொகையை இழந்திருக்கிறார். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரபல நடிகரின் போலி ஏஐ வீடியோ – ஃபேஸ்புக்கில் ரூ.11 லட்சத்தை இழந்த பெண்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 May 2025 20:45 PM IST

கண்ணால் பார்ப்பது பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற முன்பை விட இந்த டிஜிட்டல் யுகத்தில் அதிகம் தேவைப்படும் பழமொழி. தொழில்நுடப் வளர்ச்சி அதிகரித்திருக்கும் இந்த காலகட்டத்தில் ஏகப்பட்ட சைபர் குற்றங்களும் (Cyber Crime) அதிகரித்திருக்கின்றன. அரசு அதிகாரிகள் போல நடித்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்களை நாம் அடிக்கடி செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். தற்போது கூடுதலாக ஏஐ (AI) மூலம்  போலியான தோற்றத்தை உருவாக்கி மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்துவருகின்றன. அவை உண்மைக்கு மிக நெருக்கமாக இருப்பதால் மக்கள் எளிதில் ஏமாந்து விடுகின்றனர்.

இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் கிளூனியின் போலியான AI உருவாக்கப்பட்ட வீடியோக்களை வைத்து, அர்ஜென்டினாவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ரூ.11.3 லட்சத்திற்கு மேல் பணம் திருடப்பட்ட சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோசடிக்காரர்கள், ஜார்ஜ் கிளூனியின் முகத்தை போல deepfake தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி, அந்தப் பெண்ணை ஏமாற்றியிருக்கின்றனர். இந்த வீடியோக்களில் அச்சு அசல் குளூனி பேசுவது போலவும், புன்னகை செய்வது போலவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன

ஹாலிவுட் நடிகர் என நம்பி ரூ.11 லட்சத்தை ஏமாந்த பெண்

அர்ஜென்டினாவை சேர்ந்த பெண் ஒருவர், ஃபேஸ்புக்கில் ஜார்ஜ் கிளூனி பெயரில் உள்ள ஒரு அக்கவுண்டை உண்மை என நம்பி ஃபிரெண்ட் லிஸ்டில் இணைத்திருக்கிறார். பின்னர் தொடர்ந்து 6 வாரங்கள் அவருடன் தினமும் உரையாடியுள்ளார். அப்போது, ‘நீங்கள் எனக்கு மிக முக்கியமானவர், உங்கள் ஆதரவிற்கு நன்றி, உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த வேலை வாய்ப்பு தருகிறேன்’ என்ற வார்த்தைகள் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி பணம் கேட்டுள்ளார்.

முதலில் ‘Fans Club’ கார்டு வாங்க பணம் கேட்டிருக்கிறார். அதன் பின்னர் அந்த கார்டுக்காக மேலும் பல முறை பணம் வாங்கியிருக்கிறார். மேலும், வேலை வாய்ப்பு ஏற்படுத்த பணம் தேவை என கூறி, சில கட்டங்களாக பணத்தை கேட்டுள்ளார். அந்தப் பெண் பலமுறை பணம் அனுப்பி வந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து எஃப்பிஐயிடம் புகார் அளித்துள்ளார். அந்த பெண் இந்திய மதிப்பில் ரூ. 11 லட்சத்தை இழந்திருக்கிறார்.

பிராட் பிட் பெயரில் மோசடி

இதுபோன்று கடந்த ஜனவரியிலும் பிரான்ஸ் நாட்டில் ஒரு பெண், பிராட் பிட் போல deepfake வீடியோ மூலம் 697,000 பவுண்ட்டை இழந்திருக்கிறார். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 7.9 கோடியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் வரும் deepfake வீடியோக்களால் அதிகம் பேர் ஏமாற்றமடைகின்ரனர்.  சமூக வலைதலங்களில் யாரும் தனிப்பட்ட முறையில் பணம் கேட்டால், அது போலியா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவசர படாமல் பொறுமையாக அந்த பக்கத்தின் உண்மை தன்மை குறித்து ஆராய வேண்டும். ஏஐ டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆபத்தான நிலையில் வளர்ந்து வருகிறது. அதனிடம் மிகவும் எச்சரிக்கயாக இருக்க வேண்டும்.