நேபாளத்தில் சமூக வலைதள தடைக்கு எதிராக Gen Z இளைஞர்கள் போராட்டம் – ஒருவர் பலி, 80 பேர் படுகாயம்
Kathmandu Protests : நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தடையை நீக்கக் கோரி நேபாள அரசுக்கு எதிராக ஜென் சி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையிலான சண்டையில் ஒருவர் பலியானார்.

நேபாளத்தில் இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக ஜென் சி இளைஞர்கள் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. செப்டம்பர் 8, 2025 அன்று இந்த போராட்டம் அரசின் கட்டுப்பாடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் பரவிய நிலையில் வன்முறை வெடித்தது. குறிப்பாக பாராளுமன்றம் அருகே போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலை கட்டுப்படுத்த தடுக்க பாதுகாப்பு படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனால் நேபாளமே கலவர பூமியாக மாறியுள்ளது.
மாலைதீகர் என்ற பகுதியில் தொடங்கிய போராட்டம் நாடாளுமன்றம் வரை முன்னேறியது. போராட்டக்காரர்களை தடுக்க காவல்துறையினர் தடுப்பு வேலிகளை அமைத்தனர். இளைஞர்கள் அதனை உடைத்து முன்னேறினர். அதனை தடுக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசினர், இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




இதையும் படிக்க : காளான் கொலையாளிக்கு சாகும் வரை ஜெயில்.. அடுத்தடுத்து 3 கொலை.. அதிர வைக்கும் பின்னணி!
சமூக வலைதளங்களுக்கு தடை
கடந்த செப்டம்பர் 4, 2025 அன்று நேபாள அரசு சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு தகவல் தொடர்பு அமைச்சகத்தில் பதிவு செய்யவில்லை எனக் கூறி தடை விதித்தது. இதுவே போராட்டத்துக்கு அடிப்படை காரணமாக அமைந்தது. அரசு இதை ஒழுங்குமுறை நடவடிக்கை என்று கூறினாலும், இளைஞர்கள் இதனை விமர்சனங்களை கட்டுப்படுத்த முயற்சி என கருதுகின்றனர். இணையளம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை துண்டித்தாலும் போராட்டக்காரர்கள் டிக்டாக், ரெடிட் போன்ற பிற தளங்களைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கில் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.’
இளைஞர்களின் போராட்ட வீடியோ
#WATCH | Kathmandu, Nepal | Protestors climb over police barricades as they stage a massive protest against the ban on Facebook, Instagram, WhatsApp and other social media sites. pic.twitter.com/mHBC4C7qVV
— ANI (@ANI) September 8, 2025
இளைஞர்கள் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் கோபத்தில் அவற்றை தகர்த்தெறிந்து முன்னேறினர். நிலைமை மோசமான நிலையில், காத்தமண்டு நகரின் முக்கிய பகுதிகளில் குறிப்பாக பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தினர்.
இதையும் படிக்க : ஆப்கானிஸ்தானில் இடிபாடுகளில் சிக்கிய பெண்கள் மீட்கப்படவில்லை?.. அதிர்ச்சியூட்டும் காரணம்!
பிரதமரின் விளக்கம்
இந்த நிலையில் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலி சமூக ஊடகங்கள் மீதான தடை குறித்து தனது நிலைப்பாட்டை விளக்கினார். அப்போது பேசிய அவர், நாட்டை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியும் ஏற்கப்படாது. சட்டத்தையும் அரசியலமைப்பையும் மீறுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. நாட்டின் சுதந்திரம் மிகவும் சிலரின் கவலையை விட முக்கியம் என்றார்.
முன்னதகாக நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 28, 2025 முதல் 7 நாட்கள் சமூக வலைதள நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் ஃபேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப், எக்ஸ், போன்ற எந்த நிறுவனமும் விண்ணப்பிக்காததால், தடை அமல்படுத்தப்பட்டது.