NRIகளும் இனி UPI மூலம் பணம் அனுப்பலாம்.. இந்திய சிம் கார்டு தேவையில்லை.. NPCI அறிவிப்பு!
NRI's Can Send Money Through UPI | யுபிஐ தொடர்பான பல அறிவிப்புகளை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் யுபிஐ மூலம் பண அனுப்பலாம் என்று அறிவித்துள்ளது. மேலும், அதற்கு இந்திய சிம் கார்டும் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் பணம் அனுப்ப இனி இந்திய சிம் கார்டு கட்டாயம் இல்லை என்று இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI – National Payment Corporation of India) அறிவித்துள்ளது. முன்னதாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் யுபிஐ மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு இந்திய மொபைல் எண் கட்டாயமாக இருந்த நிலையில், அதில் மாற்றம் செய்து என்பிசிஐ உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், யுபிஐ மூலம் பண அனுப்ப என்பிசிஐ அறிவித்துள்ள தளர்வு குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இந்தியாவின் யுபிஐ
இந்தியாவில் யுபிஐ சேவை பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், சில உலக நாடுகளிலும் யுபிஐ பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் யுபிஐ மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு இந்திய சிம் கார்டு கட்டாயம் என்ற நிலை இருந்தது. ஆனால், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதில் முக்கிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் இனி வெளிநாடுகளில் இருந்தபடியே பணம் அனுப்ப முடியும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. என்பிசிஎஐ இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) மற்றும் தனியார் வங்கிகளோடு இணைந்து இந்த வசதியை கொண்டு வந்திருக்கிறது.
என்ஆர்ஐகளுக்கு இனி இந்திய சிம் கார்டு தேவையில்லை
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், இதற்காக அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் இந்தியா சிம் கார்டை வைத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்தபடியே இந்தியாவில் இருக்ககூடிய குடும்பங்களுக்கு யுபிஐ பயன்படுத்தி பணம் அனுப்புவது மற்றும் பில் செல்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.




எப்படி பயன்படுத்துவது?
இதற்கு முதலில் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள், இந்தியாவுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் இந்தியாவை சேர்ந்த ஏதேனும் ஒரு வங்கியின் என்ஆர்இ (NRI – Non Residental Indians) அல்லது என்ஆர்ஓ (NRO – Non Resident Ordinary) கணக்கை வைத்திருக்க வேண்டும். அடுத்தப்படியாக அரசு அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஏதேனும் ஒரு நாடுகளில் தங்கி அந்த நாட்டின் சிம் கார்டை பயன்படுத்தும் நபராக இருக்க வேண்டும். பிறகு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். அதில் வங்கி கணக்கையும், வெளிநாட்டு மொபைல் எண்ணையும் இணைக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இந்திய சிம் கார்டு இல்லாமலே பணம் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.