டிஜிட்டல் கைது என கூறி மூதாட்டியிடம் ரூ.7.70 கோடி பணம் பறித்த கும்பல்.. ஷாக் சம்பவம்!
Digital Arrest Scam | சமீப காலமாக டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மும்பையை சேர்ந்த மூதாட்டி ஒருவரிடம் ஒரு கும்பல் டிஜிட்டல் கைது என்ற பெயரை பயன்படுத்தி ரூ.7.7 கோடி பணத்தை மோசடி செய்துள்ளது.

இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதன் மூலம் நடைபெறும் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 83 வயது மூதாட்டி ஒருவரை டிஜிட்டல் கைது (Digital Arrest) செய்துள்ளதாக கூறி மோசடி கும்பல் ஒன்று ரூ.7.70 கோடி பணத்தை மோசடி செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், மோசடி கும்பல் மூதாட்டியை ஏமாற்றி ரூ.7.70 கோடி பணத்தை பறித்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் கைது என கூறி மூதாட்டியிடம் மோசடியில் ஈடுபட்ட கும்பல்
மும்பை கொலபா பகுதியை சேர்ந்தவர் 83 வயது முதாட்டி. பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர், தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், ஆகஸ்ட் 4, 2025 அன்று மூதாட்டியை தொடர்ப்புக்கொண்ட நபர் ஒருவர் தன்னை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய ஊழியர் என அறிமுகம் செய்துக்கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வங்கி கணக்கிற்கு சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாக கூறி அந்த நபர் இணைப்பை துண்டித்துள்ளார்.
இதையும் படிங்க : e PAN : இ பான் கார்டு பதிவிறக்கம் செய்ய கூறி இமெயில் வந்ததா?.. தப்பி தவறி கூட திறந்துவிடாதீங்க!




ஏற்கனவே அந்த நபர் கூறியதை கேட்டு குழப்பத்தில் இருந்த மூதாட்டிக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ கால் வந்துள்ளது. அதில் காவலர் சீருடை அணிந்து பேசிய நபர், மூதாட்டியை டிஜிட்டல் கைதில் வைத்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் வீட்டிற்கு வந்து மூதாட்டி மற்றும் அவரது பிள்ளைகளையும் கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியில் உரைந்த மூதாட்டி அவர்கள் சொன்ன அனைத்தையும் செய்துள்ளார்.
பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்புமாறு கூறிய கும்பல்
அதனை அடுத்து போலீஸ் சீருடையில் பேசிய நபர் ஒருவர், மூதாட்டியிடம் பல்வேறு வங்கி கணக்குகளை கூறி அவற்றுக்கு பணம் அனுப்ப மிரட்டியுள்ளார். பயத்தில் அவர்கள் சொன்னதை செய்த மூதாட்டி அந்த வங்கி கணக்குகளுக்கு சுமார் 7.70 கோடி பணத்தை அனுப்பி வைத்துள்ளார். மூதாட்டியிடம் முடிந்த அளவு பணத்தை பெற்றுக்கொண்ட கும்பல் அவரது தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளது.
இதையும் படிங்க : WhatsApp : மோசடிகளை தடுக்க புதிய அம்சங்கள்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்!
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி நடந்தவற்றை தனது மகளிடம் கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.