தீபம் ஏற்ற தயாராகும் தமிழகம்.. மிரள வைக்கும் அகல் விளக்கு தயாரிப்பு பணி.. வைரலாகும் புகைப்படங்கள்!
Karthigai Earthen Lamps Making : கார்த்திகை மாதம் தொடங்கி உள்ள நிலையில், திருக்கார்த்திகை தீபத்துக்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு விதமான அகல்விளக்குகள் தயார் செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 17- ஆம் தேதி) கார்த்திகை மாதம் பிறந்துள்ளது. இன்று முதல் வீடுகள், கோவில்கள் உள்ளிட்டவற்றில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். இந்த விளக்குகள் பெரும்பாலும் பழங்காலம் முதல் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகள் ஆகும். இன்று முதல் கார்த்திகை மாதம் நிறைவு வரை பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபடுவார்கள். அதிலும், முக்கியமாக திருக்கார்த்திகை தினத்தில் வீடுகள் மற்றும் கோவில்களில் ஏராளமான விளக்குகளை ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான திருக்கார்த்திகை வருகிற நவம்பர் 24- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) வருகிறது. இதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு விதமான அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி
அந்த வகையில், சேலம் மாவட்டம், நங்கவள்ளி பகுதியில் மண்பாண்ட தொழிலாளர்கள் இரவு பகலாக மண் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல, மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளான வனவாசி, குளத்தூர், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் 100- க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் பல்வேறு விதமான மண் அகல் விளக்குகளை தயாரித்து வருகின்றனர். இதில்,
மேலும் படிக்க: கார்த்திகை மாதத்தில் சிவபெருமானுக்கு எந்த மலர்களைச் சமர்ப்பிக்கலாம்?
- மண் அகல்விளக்கு.
- மாக்கள் அகல் விளக்கு.
- வர்ணம் பூசப்பட்ட அகல் விளக்கு.
- சாதாரண வட்டக்கல்.
- தாமரைப்பூ அகல் விளக்கு.
- வெற்றிலை மற்றும் மாங்காய் அகல் விளக்கு.
- ஆமை அகல் விளக்கு.
- யானை, மயில், விநாயகர், காமாட்சி அம்மன், பசு உள்ளிட்ட உருவங்கள் பொறிக்கப்பட்ட விளக்குகள் செய்யப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மத்தியில் அகல் விளக்கு மவுசு குறைவு
இது தொடர்பாக, மண் அகல் விளக்குகள் தயார் செய்யும் பணிகள் ஈடுபட்டு வரும் மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: நகரங்களில் பெண்கள் தங்கள் வீடுகளில் களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வெகுவாக குறைந்துள்ளது. தற்போது, மாறிவரும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் நவீன விளக்குகளை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பழங்கால முதல் தொன்று தொட்டு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மண் அகல் விளக்குகளை யாரும் பெரிதாக பயன்படுத்தும் நிலை இல்லாமல் போய் உள்ளது. இதனால், களிமண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளுக்கு மவுசு குறைந்துள்ளது.
ஒரு மூட்டை அகல்விளக்குகள் ரூ.800 க்கு விற்பனை
இருப்பினும் கிராம பகுதிகளில் தற்போதும் பெரும்பாலான பெண்கள் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை பயன்படுத்தி தீபம் ஏற்றி திருக்கார்த்திகை தீபத்தை கொண்டாடி வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில், களிமண்ணால் தயாரிக்கப்படும் அகல் விளக்குகள் விற்பனை மந்தமாக உள்ளது. ஒரு மூட்டை அகல் விளக்குகள் ரூ. 800- க்கு விற்பனை செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.
மேலும் படிக்க: கார்த்திகை மாதம்: தீபம் முதல் சோமவாரம் வரை முக்கிய நாட்கள் இதோ!



