AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஆர்.ஏ.புரம் அரசு இல்லத்திற்கு மாறுகிறாரா முதல்வர் விஜய்?.. பொதிகை வளாக வீட்டில் தீவிரமடையும் புனரமைப்புப் பணிகள்.. முழு விவரம்!!

CM Vijay Residence: நீலாங்கரையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு வருவதால் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, சென்னை ஆர்.ஏ.புரம் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள பொதிகை வளாக அரசு இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் மாற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்.ஏ.புரம் அரசு இல்லத்திற்கு மாறுகிறாரா முதல்வர் விஜய்?.. பொதிகை வளாக வீட்டில் தீவிரமடையும் புனரமைப்புப் பணிகள்.. முழு விவரம்!!
முதல்வர் விஜய்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 23 Oct 2026 10:07 AM IST

சென்னை, அக். 23: கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், முதல்வர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது சொந்த இல்லத்தில் இருந்து தினமும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து அலுவலகப் பணிகளைக் கவனித்து வருகிறார். இதற்கிடையே, சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தை அவர் தனது முகாம் அலுவலகமாகப் பயன்படுத்திச் சில முக்கியப் பணிகளுக்காக மட்டுமே தங்கி வருகிறார். இருப்பினும், நீலாங்கரையில் இருந்து தினசரி தலைமைச் செயலகத்திற்கு வந்து செல்வது நீண்ட நேரப் பயணத்தைக் கோருவதோடு, வழியிலுள்ள பல்வேறு இணைப்புச் சாலைகளையும் கடக்க வேண்டியுள்ளது. இதனால் முதலமைச்சரின் பாதுகாப்பு மற்றும் கான்வாய் செல்லும் போது பொதுமக்களின் போக்குவரத்து தற்காலிகமாகத் தடைபடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் முதல்வர் விஜய் உறுதியாக உள்ளார்.

இதையும் படிக்க: பெளர்ணமி- வார விடுமுறை.. சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!

பொதிகை இல்லத்தில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்:

பொதுமக்களுக்குத் தனது பயணத்தால் எந்தவிதமான இடையூறும் ஏற்படக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில், தலைமைச் செயலகத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு பகுதிக்குத் தனது வசிப்பிடத்தை மாற்றினால் என்னவென்று முதலமைச்சர் தரப்பில் பரிசீலிக்கப்பட்டது. அதனைக் கருத்திற்கொண்டு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அமைச்சர்கள் வசிக்கும் பகுதியான ஆர்.ஏ.புரம் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் அமைந்துள்ள ‘பொதிகை வளாகம்’ அரசு இல்லம் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்திற்கு எளிதில் வந்து செல்லக்கூடிய வகையிலும், பாதுகாப்பு வழிமுறைகளைச் சிறப்பாகக் கையாளுவதற்கும் ஏற்ற உகந்த இடமாக இந்த அரசு குடியிருப்புப் பகுதி அமைந்துள்ளதால், முதலமைச்சரின் இல்லத்தை இங்கு மாற்றுவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அரசு உயர் அதிகாரிகளின் ஆய்வும் பாதுகாப்பும்:

ஆர்.ஏ.புரம் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள பொதிகை வளாக அரசு இல்லத்திற்கு முதலமைச்சர் மாறுவதற்கான அறிவிப்புக்கு முன்னதாக, அங்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. கட்டிடத்தின் உறுதித்தன்மை, பாதுகாப்புப் படையினர் தங்குமிடம், நவீன வசதிகள் மற்றும் அலுவலகக் கூட்டங்களை நடத்தும் வகையிலான உள்கட்டமைப்பு மாற்றங்களைச் பொதுப்பணித்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். முதலமைச்சரின் தேவைகளுக்கு ஏற்பவும், உரிய பாதுகாப்பு விதிமுறைகளின்படியும் இந்த இல்லத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதால், பணிகள் நிறைவடைந்தவுடன் அவர் இங்கு மாறுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: அரசியல் கட்சியாக மாறும் வீ த லீடர்ஸ்.. தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் வரும்.. மகளிர் மாநாட்டில் அண்ணாமலை அதிரடி!

விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

தன்னால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு எவ்விதத் தப்பையும் தொந்தரவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் முதலமைச்சர் விஜய்யின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நீலாங்கரையில் இருந்து தினமும் நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்த்துவிட்டு, ஆர்.ஏ.புரம் அரசு இல்லத்தில் தங்குவதன் மூலம் நிர்வாகப் பணிகளைத் தாமதமின்றிச் சுமுகமாகக் மேற்கொள்ள முடியும் எனக் கருதப்படுகிறது. இந்த புனரமைப்புப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு, முதலமைச்சரின் புதிய வசிப்பிட மாற்றம் குறித்த இறுதி முடிவு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Follow Us