அரசியல் கட்சியாக மாறும் வீ த லீடர்ஸ்.. தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் வரும்.. மகளிர் மாநாட்டில் அண்ணாமலை அதிரடி!
Annamalai Speech In Krishnagiri Conference : வீ த லீடர்ஸ் அமைப்பு எதிர் காலத்தில் அரசியல் கட்சியாக மாற்றம் செய்யப்பட்டு தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் கொண்டுவரப்படும் என்று கிருஷ்ணகிரி மகளிர் வளர்ச்சி மாநாட்டில் அந்த அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் மகளிர் வளர்ச்சி மாநாடு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், வீ த லீடர்ஸ் நிறுவனர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் குழந்தைகள் எதிர்காலத்தில் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டம் 3 மொழிகளை சரளமாக பேசும் இடமாக உள்ளது. பல்வேறு மொழிகளை கற்றுக் கொள்வது குழந்தைகளின் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கும், பன்முக வளர்ச்சிக்கும் பெரிதும் உதவியாக இருக்கும். பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன. காக்ரோச் ஜனதா பார்ட்டி அமைப்புக்கு வீ த லீடர்ஸ் அமைப்பு ஒருபோதும் ஆதரவு அளிக்காது.
காக்ரோச் ஜனதா பார்ட்டி மீதான நடவடிக்கை சட்டப்படி
காக்ரோச் ஜனதா பார்ட்டி மீதான கைது நடவடிக்கைகளை சட்டத்தின்படி முறையாக மேற்கொள்ள வேண்டும். சிறப்பு தீவிர திருத்தம் ( எஸ் ஐ ஆர் பணிகள்) நடைபெற்ற போது அந்த காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தூங்கிக் கொண்டிருந்தார்களா. தற்போது, எதற்காக வீண் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்கள் முன்னேற்றத்தை மையமாக கொண்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் அரசியல் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக கிரிமினல் வழக்கு.. ஆளுநரிடம் அனுமதி கோரிய அதிமுக.. பின்னணி என்ன?




அரசியல் கட்சியாக மாற்றப்படும் வீ த லீடர்ஸ்
வீ த லீடர்ஸ் அமைப்பு எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் கொண்டுவரப்படும். அதே வேளையில், தற்போது நடைபெற்றது முழுமையான அரசியல் மாநாடு கிடையாது. இந்த மாநாடு முழுக்க முழுக்க பெண்களின் முன்னேற்றத்தை மையமாகக் கொண்ட சமூக நல மாநாடு ஆகும். கடந்த கால திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலங்களில் தமிழகத்தின் உள்ளூர் பொருளாதாரம் போதிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலை உயரவில்லை.
மத்திய,மாநில அரசுகள் சமமான வாய்ப்பு வழங்குக
பெண்களின் முன்னேற்றம் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் வளர வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். நமது கனவு மிகப்பெரிய கனவு ஆகும். தமிழகத்தை மறுபடியும் ஒரு பொருளாதார சக்தியாக மாற்ற வேண்டும் தமிழகத்தை விட ஜிஎஸ்டி செலுத்துவதில் உத்தர பிரதேசம் மற்றும் அரியானா உயர்ந்த நிலைக்கு சென்றுள்ளது. மத்திய அரசோ, மாநில அரசோ அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: நீண்ட கால சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும்.. சட்டத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சண்முகம்.. பின்னணி என்ன!