தவெகவில் இணைந்தால் வழக்குகள் ரத்தாகுமா? அமைச்சர் நிர்மல்குமார் கொடுத்த விளக்கம்!!
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், "உங்கள் கட்சியின் இரண்டு எம்எல்ஏ-க்களையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், நானே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் என முதல்வர் விஜய் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு நிர்மல்குமார் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார்.
சென்னை, ஜூலை 02: தமிழக வெற்றிக் கழகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இணைந்து வரும் நிலையில், மாற்றுக்கட்சிகளில் இருந்து தவெகவில் இணைபவர்கள் மீதான சட்டப்பூர்வ வழக்குகள் என்னவாகும் என்பது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார். நடந்து முடிந்து சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்ட தவெக, மாபெரும் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தொடர்ந்து, தவெக ஆட்சி அமைத்த நாள் முதல் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அக்கட்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து நிர்வாகிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
மேலும் படிக்க: வைகோவிடம் வருத்தம், ப.சிதம்பரத்துடன் ரகசிய ஆலோசனை.. தவெக தோழமைக் கட்சி கூட்டத்தில் முதல்வர் விஜய் அதிரடி!!
அந்தவகையில், இன்று கூட அதிமுகவின் முக்கிய முகங்களான முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவர்கள் இணைய உள்ளனர்.




சட்டப்பூர்வ வழக்குகள் என்னவாகும்?
இந்த சூழ்நிலையில், மாற்றுக்கட்சிகளில் இருந்து தவெகவில் இணைபவர்கள் மீதான சட்டப்பூர்வ வழக்குகள் என்னவாகும்? என்பது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் நிர்மல்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “எங்கள் கட்சியில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு இடங்களில் இருந்து வந்து இணைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் தவெகவில் இணைவதனால், அவர்கள் மீது நிலுவையில் உள்ள சட்டப்பூர்வ வழக்குகள் ஏதேனும் நிறுத்தப்படுமா என்றால், கண்டிப்பான முறையில் இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், “எந்தவொரு வழக்கிலும் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளப்பட மாட்டாது. சட்டப்பூர்வமாக என்னென்ன நடவடிக்கைகள் தொடர வேண்டுமோ, அவை அனைத்தும் கண்டிப்பாகத் தொடரும். அதில் தவெக அரசு எந்த ஒரு காலகட்டத்திலும் தலையிடாது” என்றும் அவர் திட்டவட்டமாக விளக்கமளித்தார்.
வைகோவின் கூற்றுக்கு மறுப்பு:
முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “உங்கள் கட்சியின் இரண்டு எம்எல்ஏ-க்களையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள், நானே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்கிறேன் என முதல்வர் விஜய் கூறியதாக தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு நிர்மல்குமார் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். “அப்படிப்பட்ட ஒரு வார்த்தையை எங்கள் முதலமைச்சர் ஒருபோதும் சொல்லியிருக்க மாட்டார். நூறு சதவீதம் அவர் அப்படி கூறியிருக்க வாய்ப்பில்லை” என்று மறுத்தார். மேலும், “அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து முழுமையாக வைகோ அவர்களிடமே கேட்டு நீங்கள் விளக்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
முற்றுப்புள்ளி வைத்த வைகோ:
தொடர்ந்து, நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக எம்எல்ஏ-க்களை ராஜினாமா செய்யச் சொல்லி முதல்வர் விஜய் எந்த கமிட்மென்ட்டும் தரவில்லை, அவர் சொல்லவும் இல்லை. நான்தான் என் கட்சி எம்எல்ஏ-க்களிடம் ‘நாம் திமுக கூட்டணியை விட்டு வெளியேறிய பிறகு, அங்கு எப்படி நம்மைச் சேர்ந்த இரண்டு பேர் எம்எல்ஏ-க்களாக நீடிக்க முடியும்? அது கூட்டணி தர்மமாகாது. எனவே ராஜினாமா செய்துவிட்டு வாருங்கள், நாம் தவெக ஆதரவோடு இடைத்தேர்தலைச் சந்தித்து வெற்றி பெறலாம்’ என்று கூறினேன்” எனத் தெளிவுபடுத்தினார்.
மேலும் படிக்க: திமுகவிற்கு விழுந்த பலத்த அடி!!.. முடிவுக்கு வந்த 9 ஆண்டுகால மெகா கூட்டணி.. மு.க.ஸ்டாலினின் அடுத்த வியூகம் என்ன?
முதல்வரை பிரச்சாரத்துக்கு அழைக்கலாம்:
ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலைச் சந்தித்தால் வெற்றி பெற முடியுமா என்று மதிமுகவினர் கேட்டபோது, தேவைப்பட்டால் முதலமைச்சரைக் கூட பிரச்சாரத்திற்கு அழைக்கலாம் என்று வைகோ கூறியுள்ளார். இது குறித்து முதலமைச்சரிடம் பேசிய போது, “அப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்போது அப்போது யோசிப்போம்” என்று விஜய் பதிலளித்ததாக வைகோ குறிப்பிட்டார்.