தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வெப்பமும் அதிகரிக்கும்.. வானிலை நிலவரம்..
Weather Forecast: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னை, மார்ச் 01: தமிழகத்தில் நேற்றைய தினம் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியல் உயர்ந்தும் ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் காணப்பட்டது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் மார்ச் 5ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஏனைய தமிழகம் முழுவதிலும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மக்களின் நம்பிக்கைகளை வாக்குகளாக மாற்ற வேண்டும்… திமுக மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு!
இன்று மழைக்கு வாய்ப்பு:
அந்தவகையில், இன்றைய தினம் (மார்ச் 1) மற்றும் நாளை (மார்ச் 2) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 3 முதல் மார்ச் 6 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும், இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
வெப்பநிலை உயரக்கூடும்:
அதேபோல், மார்ச் 2ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். இன்று முதல் மார்ச் 2ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் இயல்பை விட 2-3 செல்சியல் அதிகமாக இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை நிலவரம்:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை இன்றைய தினம் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரில் அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மேலும் படிக்க: “அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள்”.. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு!!
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மார்ச் 4ம் தேதி வரை தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதும் இல்லை. எனவே, மீனவர்கள் வழக்கம் போல கடலுக்கு செல்லலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.