மாணவர்கள் மீது ஏவப்பட்ட வன்முறை.. வரும் 27ஆம் தேதி விசிக தரப்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..
வரும் 27ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புதுடெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 24, 2026: மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட் கண்மூடித்தனமான வன்முறையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதேபோல், தமிழகத்திலும் சென்னை வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
விசிக தரப்பில் வரும் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம்:
இந்த நிலையில், வரும் 27ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புதுடெல்லியில் மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: 2026 ஜனவரி டூ ஜூலை வரை தெரு நாய்க்கடியால் 24 பேர் உயிரிழப்பு.. பிரச்சனக்கு தீர்வு இந்த ஆண்டு இறுதிக்குள் இலக்கு எட்டப்படும்..
மேலும், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தியதாகவும், ஏராளமான மாணவர்கள் காயமடைந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறையைக் கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் வரும் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு – லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பு:
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியேற்ற பின்னர், நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பலமுறை கசிந்ததாகவும், இதனால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொறுப்பேற்க வேண்டிய மத்திய கல்வி அமைச்சர், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: மேகதாது விவகாரத்தில் அடுத்தடுத்த அதிரடி.. பெங்களூரு செல்கிறார் முதல்வர் விஜய்… உச்ச நீதிமன்ற கதவுகளைத் தட்டவும் திட்டம்!
மேலும், போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டெல்லி காவல்துறை இதுவரை உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும், பல மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும்:
போராடி வரும் மாணவர்களின் கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆதரிப்பதாகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்றும், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.