சென்னை மின்வாரியம் அறிவிப்பு: மின்கட்டணம் செலுத்த முடியாது!
Chennai Electricity Bill: சர்வர் மேம்பாட்டு பணிகள் காரணமாக சென்னை பகுதிகளில் 2 நாட்களுக்கு மின்கட்டணம் ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்படுகின்றன. பல மின் பகிர்மான கோட்டங்களில் இந்த தற்காலிக சேவை பாதிப்பு ஏற்படும். நுகர்வோருக்கு அபராதம் இன்றி 2026 மார்ச் 9-ந்தேதி வரை கட்டணம் செலுத்த கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மார்ச் 07: சென்னையில் மின்நுகர்வோருக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் கணினி சேவைகளை புதிய சர்வர்களுக்கு மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக சென்னை வடக்கு, மத்தியம் மற்றும் மேற்கு மின் பகிர்மான வட்டங்களில் உள்ள பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, தியாகராயநகர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்கட்டணம் செலுத்தும் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன. இன்று (2026 மார்ச் 7) அதிகாலை 12.01 மணி முதல் 8-ந்தேதி நள்ளிரவு வரை 2 நாட்களுக்கு ஆன்லைன் மற்றும் வசூல் மையங்கள் மூலம் மின்கட்டணம் செலுத்தவும், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகளையும் பெற முடியாது.
கணினி சேவைகள் மேம்படுத்தும் பணிகள்
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், மின்நுகர்வோர்களுக்கு மேம்பட்ட சேவைகளை வழங்கும் நோக்கில், கணினி சேவைகளை புதிய சர்வர்களுக்கு படிப்படியாக மாற்றும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மின்சார சேவைகளை வேகமாகவும் சீராகவும் வழங்குவதற்காக இந்த தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின்நுகர்வோர் ஆன்லைன் சேவைகள் மூலம் எளிதாக கட்டணம் செலுத்தவும், புதிய இணைப்புகளுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும் வசதியாக இந்த மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மேம்பாட்டுப் பணிகள் முதல்கட்டமாக சென்னை மண்டலத்தில் உள்ள சென்னை வடக்கு, சென்னை மத்தியம் மற்றும் சென்னை மேற்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன.
Also Read: வாட்ஸ்அப் மூலம் ஆம்புலன்ஸ் சேவையை எளிதாக பெறலாம்.. எப்படி தெரியுமா?
சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
இதன் காரணமாக, சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, பொன்னேரி, எழும்பூர், தியாகராயநகர், அண்ணாசாலை, மயிலாப்பூர், அம்பத்தூர், ஆவடி, அண்ணாநகர் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 12.01 மணி முதல் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 2 நாட்களுக்கு மின்கட்டணத்தை ஆன்லைன் மற்றும் மின்கட்டண வசூல் மையங்கள் மூலம் பணம் செலுத்தும் சேவைகள் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகளை பெறஇயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த காலப்பகுதியில் அனைத்து கணினி சேவைகளும் பராமரிப்பு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான பணிகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடுதல் அவகாசம் வழங்கல்
மேலும், 2026 மார்ச் 07 இன்று (சனிக்கிழமை) கட்டணம் செலுத்த வேண்டிய நுகர்வோருக்கு 2 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டு 2026 மார்ச் 9-ந்தேதி வரையில் அபராதம் இன்றி மின்கட்டணம் செலுத்தலாம் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இதனால் மின்நுகர்வோர் தேவையற்ற அவசர நிலைக்கு ஆளாகாமல், சேவைகள் மீண்டும் தொடங்கிய பிறகு சுலபமாக கட்டணத்தை செலுத்தும் வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோருக்கு அறிவுரை
எனவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர் தங்களது மின்கட்டணங்களை செலுத்துவதற்கும் மற்றும் புதிய மின்இணைப்புக்கான விண்ணப்பம் உள்ளிட்ட சேவைகளை பெறுவதற்கும் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தற்காலிக சேவை நிறுத்தம் தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுவதால், எதிர்காலத்தில் மின்சார சேவைகள் மேலும் வேகமாகவும் நம்பகமாகவும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.