புதுவையில் நடக்கும் விஜய் மக்கள் சந்திப்பு.. துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு.. தீவிரமாகும் விசாரணை…
TVK Meeting: தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுவை நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், மெட்டல் டிடெக்டர் சோதனையில் ஒரு நபர் துப்பாக்கியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என தெரியவந்துள்ளது.
புதுவை, டிசம்பர் 9, 20225: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் பொதுக்கூட்டம் இன்னும் சில நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று புதுவையில் மக்களை சந்திக்கிறார். இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரவுடன், தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. தமிழக வெற்றிக்கழகம் தனது முதல் தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. இதற்காக கட்சி தரப்பில் ஆலோசனைக் கூட்டங்கள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.
முன்னதாக திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த பின்னர் மக்கள் சந்திப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தினார். பின்னர் கடந்த மாதம் காஞ்சிபுரம் அரங்கில் 2,000 பேருக்கு மட்டும் அனுமதி அளித்து மக்கள் சந்திப்பை நடத்தினார்.
மேலும் படிக்க: புதுச்சேரியில் தவெக தொண்டர்கள் மீது போலீசார் தடியடி…என்ன காரணம்!
புதுவையில் நடக்கும் மக்கள் சந்திப்பு:
இன்று புதுவையின் உப்பளம் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்கும் அதிகபட்சம் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு புதுச்சேரியில் ரோப்-ஷோ நடத்த அனுமதி கோரப்பட்ட நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதால் மக்கள் சந்திப்பு மட்டும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு QR கோடு கொண்ட அடையாள அட்டையுடையவர்களுக்கு மட்டுமே அனுமதி. அதேசமயம், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. விஜயின் வாகனத்தை பின்தொடரக்கூடாது, சுவர், மின்கம்பம், கொடிகம்பம் போன்றவற்றில் ஏறக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: ஓபிஎஸ், டிடிவி தினகரனை சந்தித்த அண்ணாமலை.. திடீர் டெல்லி பயணம்.. பின்னணி என்ன?
துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு:
காலை முதலே தொண்டர்கள் பெருமளவில் வரத் தொடங்கியுள்ளனர். புதுவை நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், மெட்டல் டிடெக்டர் சோதனையில் ஒரு நபர் துப்பாக்கியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர். விசாரணையில், அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்றும், தமிழக வெற்றிக்கழக நிர்வாகியில் ஒருவரின் தனிப்பாதுகாவலர் என்றும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்ட நிலையில், அவர் ஏன் கூட்டத்திற்கு வந்தார்? மேலும் துப்பாக்கியுடன் வந்ததன் நோக்கம் என்ன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அவரின் வருகையின் பின்னணி, துப்பாக்கி வைத்திருந்தது எந்த காரணத்தால், ஏதேனும் பாதுகாப்பு அச்சுறுத்தலா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.