குதிரை பேரம் வழக்கு.. பெங்களூருவில் பிடிபட்ட டாக்டர்.. செந்தில் பாலாஜியை நெருங்கும் வளையம்!!
தவெக ஆட்சிக்கவிழ்ப்பு சதி வழக்கில் பெங்களூருவில் பதுங்கியிருந்த டாக்டர் ராஜசேகர், சேதுராஜன் கைதாகி, ரூ.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான சேதுராஜன் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என்பதால் சம்மன் மற்றும் லுக்அவுட் நோட்டீஸ் மூலம் போலீஸ் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
சென்னை, ஜூலை 10: தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேரம் பேசி, ஆட்சியைப் கவிழ்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் தற்போது புதிய மற்றும் அதிர்ச்சிகரமான திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் இரண்டு பேரைத் திருவல்லிக்கேணி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆதரவாகச் செயல்பட ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க: 287 நாட்களுக்குப் பின் கரூர் செல்லும் முதல்வர் விஜய்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. அதிரடி பாதுகாப்பு நெறிமுறைகள்!!
பெங்களூருவில் சுற்றி வளைக்கப்பட்ட முக்கியப் புள்ளிகள்:
திருவல்லிக்கேணி போலீசார் ஏற்கனவே கைதான 9 பேரில் நரேஷ், ரமேஷ், கார்த்திக் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்துத் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களின் செல்போன் அழைப்புகள் மற்றும் பணப்பரிமாற்றங்களை ஆய்வு செய்தபோது, நாமக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் சேதுராஜன் ஆகியோர் இவர்களுடன் தொடர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பெங்களூருவில் பதுங்கியிருந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜனைத் தனிப்படை போலீசார் அங்கு வைத்து அதிரடியாகச் சுற்றி வளைத்துப் பிடித்து சென்னைக்கு அழைத்து வந்தனர். மேலும், நாமக்கல்லில் வைத்து மற்றொரு மருத்துவர் உட்பட இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தோண்ட தோண்ட சிக்கிய லட்சங்கள்:
விசாரணையின் முடிவில் மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேதுராஜன் ஆகிய இருவரது கைதும் முறைப்படி பதிவு செய்யப்பட்டது. இந்த சதித் திட்டத்திற்காகப் பயன்படுத்த கைவசம் வைக்கப்பட்டிருந்த தொகையில், டாக்டர் ராஜசேகரிடமிருந்து ரூ.56 லட்சமும், சேதுராஜனிடமிருந்து ரூ.14 லட்சமும் என மொத்தம் ரூ.70 லட்சம் ரொக்கப் பணத்தைத் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
செந்தில் பாலாஜிக்கு லுக்அவுட் நோட்டீஸ்:
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேதுராஜன், முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ-வுமான வி.செந்தில் பாலாஜிக்கு மிக நெருக்கமானவர் என்பதால் இந்த வழக்கின் விசாரணை திமுகவின் முக்கியப் புள்ளிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே திருவல்லிக்கேணி போலீசார் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வி.அசோக் குமார் ஆகியோருக்குச் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகாமல் சம்மனைத் தவிர்த்தனர். இதன் காரணமாக, அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் பொருட்டு, குடிவரவு அதிகாரிகளுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில் தொடர்புடைய, தற்போது சிங்கப்பூரில் இருப்பதாகக் கருதப்படும் லட்சுமண பெருமாள் என்பவருக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: வரலாற்றிலேயே முதல்முறை… மின்தடைக்காக பள்ளிக்கு விடுமுறை.. காஞ்சிபுரத்தில் அரங்கேறிய வினோதம்!
நீதிமன்றத்தை நாடிய திமுகவினர்:
கைது நடவடிக்கை தீவிரமடைவதைச் சற்றே தணிக்கும் வகையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், பணப் பரிமாற்றத்திற்கான முறையான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர்களது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதும் குறிப்பிடதக்கது.