“நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை… கட்சியை விட்டு போக மாட்டேன்” – விஜயை விமர்சித்த ரஞ்சனா
TVK Leader Vijay Criticized: விஜயின் குடும்ப பிரச்சனை மற்றும் பேச்சு குறித்து த.வெ.க நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் விமர்சனம் செய்தார். விஜய் சில விஷயங்களில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். கட்சியில் இருந்து விலகமாட்டேன், நடவடிக்கை எடுத்தாலும் ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்தார்.
சென்னை மார்ச் 9: சென்னை பெருங்கம்பாக்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், கட்சித் தலைவர் விஜயின் சமீபத்திய பேச்சு மற்றும் அவரது குடும்ப பிரச்சனை தொடர்பாக கடும் விமர்சனங்களை முன்வைத்தார். சமுதாயத்தில் இன்றைய காலத்தில் விவாகரத்து சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு அரசியல் தலைவரின் மனைவியே விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்வது முதல் முறையாக நடைபெறுகிறது என அவர் கூறினார். மக்கள் விரும்பும் தலைவராக இருக்கக் கூடிய விஜய், சில விஷயங்களில் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கத்தைப் பேணுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“பெண்ணியம் பேசும் முன் வாழ்க்கையில் ஒழுக்கம் வேண்டும்”
ஏற்கனவே விஜய் தனது குடும்ப பிரச்சனை குறித்து மேடையில் பேசிய கருத்தை விமர்சித்து ரஞ்சனா நாச்சியார் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் “எது ‘வொர்த் இல்லை’ தலைவா? உங்கள் மனைவியா அல்லது திருமண வாழ்க்கையா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேடையில் பெண்ணியம் குறித்து பேசுவதற்கு முன்பு வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், சங்கீதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் வகையில் ஒரு நடிகையை பொதுவெளியில் அழைத்து வருகிறார் எனவும் குற்றம்சாட்டினார். த.வெ.க கொள்கை தலைவர்களாகக் கருதப்படும் வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் போன்றவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப விஜய் நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.
“குடும்பத்தை காப்பாற்ற முடியாதவர் மக்களை எப்படி காப்பாற்றுவார்?”
தமிழக அரசியல் வரலாற்றில் பல தலைவர்கள் இரண்டு அல்லது மூன்று மனைவிகளை வைத்திருந்தாலும், எந்த மனைவியும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்ததில்லை என்று ரஞ்சனா நாச்சியார் குறிப்பிட்டார். “நான் மதிக்கும் தலைவர் தனது மனைவியை கூட காப்பாற்ற முடியவில்லை என்றால், அவர் மக்களை எப்படி காப்பாற்ற முடியும்?” என்ற கேள்வியையும் எழுப்பினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு நடிகை குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பொதுவெளியில் பேசிய கருத்துக்கு தாம் கண்டனம் தெரிவித்திருந்ததாகவும், ஆனால் தற்போது த.வெ.க கூட்டத்தில் விஜய் கண்ணியமின்றி பேசுவது வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Also Read: விஜய் விவாகரத்து விவகாரம்.. சங்கீதாவுக்கு இலங்கை எம்.பி கண்டனம்… வீடியோ வைரல்!
“நான் பாஜக ஸ்லீப்பர் செல் அல்ல”
தான் முன்பு பாஜகவில் இருந்ததாகவும், ஆனால் தற்போது த.வெ.க-வில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இருப்பதாகவும் ரஞ்சனா நாச்சியார் விளக்கினார். தன்னை பாஜக ஸ்லீப்பர் செல் என கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றும் அவர் கூறினார். மேலும், விஜயை அவரது பெற்றோர் கூட சந்திக்க முடியாத நிலை இருப்பதாகவும், இடையில் ஒருவர் இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த நபரின் பெயரை தற்போது கூற விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
“கட்சியில் இருந்து விலகமாட்டேன்”
தன்னுடைய கருத்துகளுக்காக கட்சி நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்வேன் என்றும், ஆனால் த.வெ.க-வில் இருந்து விலகமாட்டேன் என்றும் ரஞ்சனா நாச்சியார் உறுதியாக தெரிவித்தார். விஜயை ஆதரிக்கும் தொண்டர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் அவர் பொறுப்பு உணர்வுடன் நடக்க வேண்டும் என்றும் கூறினார். மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அவருடன் நிற்கும் நிலையில், மேடையில் பேசும் போது அவர் மேலும் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பெண்கள் பலரும் “விஜய்க்கு தான் என் ஓட்டு” என்று கூறும் நிலையில், பெண்கள் குறித்து கண்ணியமாக பேச வேண்டும் என்றும், தனது குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.