AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்.. ஆளுநர் உரை முதல் எதிர்க்கட்சிகளின் அனல் பறக்கும் கேள்விகள் வரை.. நடக்கப்போவது என்ன?

தமிழகத்தில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க் கடன் தள்ளுபடி, குதிரைப் பேர ஊழல் மற்றும் அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது உள்ளிட்ட விவகாரங்களை பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம்.. ஆளுநர் உரை முதல் எதிர்க்கட்சிகளின் அனல் பறக்கும் கேள்விகள் வரை.. நடக்கப்போவது என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Jun 2026 07:08 AM IST

ஜூன் 18, 2026: தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அதன் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்க உள்ளது.  நடைபெற்று முடிந்த 17வது சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபித்த முதல்வர் விஜய்:

முன்னதாக, தமிழக வெற்றிக் கழக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு மே 13ஆம் தேதி நடைபெற்றது. அதில் முதலமைச்சர் விஜய் பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டினார். மொத்தம் 144 சட்டமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வாக்கெடுப்புக்குப் பிறகு பெரும்பான்மை உறுதியானதைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தொடர்:

இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் சட்டப்பேரவையில், தமிழக அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள உரையை வாசிப்பார். அது ஆங்கிலத்தில் இருக்கும் நிலையில், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வாசிப்பார்.

பின்னர், சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். இதில் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும். அதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதம் நிறைவடைந்த பிறகு முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்குவார்.

புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா?

இந்த கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படும். மேலும், புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவச பேருந்து.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!!

தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்பதால், இதில் பங்கேற்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் புதிய முகங்களாக உள்ளனர். இதனால், தமிழக வெற்றிக் கழக தரப்பில் புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பயிற்சி வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

வலுவான எதிர்க்கட்சிகள் – அனல் பறக்கும் கேள்விகள்:

ஒருபுறம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் புதிய முகங்களாக இருந்தாலும், மறுபுறம் எதிர்க்கட்சிகள் அனுபவம் மிக்கவர்களாக உள்ளனர். தமிழகத்தில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள், மின்வெட்டு பிரச்சினைகள், பயிர்க் கடன் தள்ளுபடி, குதிரைப் பேர ஊழல் மற்றும் அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது உள்ளிட்ட விவகாரங்களை பிரதான எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக எழுப்பத் திட்டமிட்டுள்ளன.

எனவே, இந்த கூட்டத்தொடரில் அனல் பறக்கும் கேள்விகளும், அதற்கு அரசு சார்பில் அளிக்கப்படும் பதில்களும் இடம்பெறும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், ஆளுநர் உரை நடைபெற உள்ள நிலையில், சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Follow Us