சவால்களை எதிர்கொண்டு மதுராந்தகத்தில் கொடிகட்டிய தவெக.. மரகதம் குமரவேல் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றி!!
Maduranthakam byelection results: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராகக் களமிறங்கிய மரகதம் குமரவேல் அமோக வெற்றி பெற்றுள்ளார். கட்சித் தாவல் விமரிசனங்களையும், அரசியல் சவால்களையும் தாண்டி, கடந்த பொதுத்தேர்தலை விட கூடுதல் வாக்கு வித்தியாசத்திலும், அதிக வாக்கு சதவீத அடிப்படையிலும் அவர் பெற்றுள்ள இந்த மாபெரும் வெற்றி தமிழக அரசியலில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு, அக்.10: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் எதிர்தரப்பு வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகப் பதவியேற்ற அவர், பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்தச் சூழலில், அதே தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு அவர் பெற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் விவாதிக்கப்படும் பொருளாகவும் மாறியுள்ளது.
மேலும் படிக்க: “தைரியமா இரு மா..” – தாராபுரம் திமுக வேட்பாளருக்கு ஆறுதல் சொன்ன மு.க.ஸ்டாலின்
அரசியல் பின்னணியும் கட்சித் தாவலும்:
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் கடந்த 2014 முதல் 2019 வரை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்த மரகதம் குமரவேல், அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் பொதுத்தேர்தலில் மதுராந்தகம் தனித்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினரானார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2026ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக சார்பில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் களம் கண்டார். அந்தத் தேர்தலில் அவர் 69,284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அப்போது தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கௌதரி எழில்மலை 7,194 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இதன் பின்னர் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த சூழலில், அதிமுக எம்எல்ஏவாக இருந்த மரகதம் குமரவேல் தாம் வெற்றி பெற்ற வெறும் 21 நாட்களுக்குள்ளாகவே தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தவெகவில் இணைந்த அவரை, அதே மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளராகத் தவெக தலைமை மீண்டும் களமிறக்கியது.
இடைத்தேர்தல் களமும் கடும் விமர்சனங்களும்:
மரகதம் குமரவேல் தனது கட்சியை மாற்றியது மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்குச் செய்யும் நம்பிக்கை துரோகம் என்று அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தன. தேர்தல் பிரச்சாரத்தின் போது சில பகுதிகளில் பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளையும் அவர் எதிர்கொள்ள நேரிட்டதுடன், சில இடங்களில் தனது பிரச்சாரத்தைப் பாதியிலேயே பாதியிலேயே நிறுத்திக்கொண்டு திரும்பும் அசாதாரண சூழல்களும் அரங்கேறின. இத்தகைய கடுமையான அரசியல் அழுத்தங்களுக்கும் விமர்சனங்களுக்கும் மத்தியில் நடைபெற்ற இந்த இடைத்தேர்தலில், பலரும் எதிர்பாராத வகையில் மரகதம் குமரவேல் தனது பலத்தை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
மேலும் படிக்க: பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி – முதல்வர் விஜய் கருத்து
வாக்கு எண்ணிக்கையும் வெற்றியின் சிறப்பம்சங்களும்:
இந்த இடைத்தேர்தலில் மொத்தமாக 1,84,413 வாக்குகள் பதிவாகின. இதில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மட்டும் 74,048 வாக்குகளை வாரிக் குவித்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பரந்தாமன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். திமுக வேட்பாளரை விட 20,404 வாக்குகள் வித்தியாசத்தில் மரகதம் குமரவேல் அபார வெற்றியைத் தன்வசப்படுத்தினார். பொதுத்தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த இடைத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தபோதிலும் மற்றும் வாக்குகள் பல முனைகளாகப் பிரிந்திருந்தபோதிலும், வாக்கு சதவீத அடிப்படையிலும் வெற்றி வித்தியாச அடிப்படையிலும் மரகதம் குமரவேலின் செல்வாக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் திமுக இரண்டாம் இடத்தைப் பிடித்த நிலையில், தபால் வாக்குகள் பதிவிலும் முக்கியக் கட்சிகள் கடுமையான போட்டியை வெளிப்படுத்தின. எத்தகைய சவால்களையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டு தவெக மதுராந்தகம் தொகுதியைக் கைப்பற்றியிருப்பது அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.