பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி – முதல்வர் விஜய் கருத்து
CM Vijay on TVK Victory : இடைத்தேர்தல் வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, அக்டோபர் 9 : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 இன்று நடைபெற்ற நிலையில் 2 தொகுதிகளிலும் ஆளும் கட்சியான தவெக அபார வெற்றி பெற்றது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலும், தாராபுரத்தில் சத்தியபாமாவும் அபார வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் திமுகவிற்கு 2வது இடமும், அதிமுகவுக்கு 3வது இடமும் கிடைத்தன. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து அறிக்கை வெளியிட்ட தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தலில் தவெகவின் வெற்றி குறித்து முதல்வர் விஜய் பதிவு
இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், வாக்குகளுக்கு ஒரு பைசா கொடுக்காமல், யாரையும் பட்டியில் அடைத்து அவமானப்படுத்தாமல், திருமங்கலம், ஈரோடு கிழக்கு ஃபார்முலா என்று எந்த ஃபார்முலாவும் இல்லாமல் அன்பு, பாச, உறவு ஃபார்முலா மற்றும் ஜனநாயகம் காக்கும் ஃபார்முலாவை வைத்து வென்ற தேர்தல் இது. தமிழகம், ஊழல் சக்திகளின் கோட்டை இல்லை. மாறாக, மாபெரும் மக்கள் சக்தியின் கோட்டை, மக்கள் மனத்தில் நீங்கா இடம் பெற்ற அன்பு மிக்க தூய சக்தியின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளது. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், பணநாயகச் சூத்திரத்தையே அடித்து நொறுக்கிப் பெற்றுள்ள வெற்றியே இது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தல்.. நாதக- கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட் இழப்பு.. வாக்கு சதவீதம் என்ன!




மேலும், 2 தொகுதிகளிலும் நாம் இரண்டு நாள்கள் பிரசாரம் மேற்கொண்டதை நக்கலாகவும் நையாண்டியாகவும் பேசியவர்களுக்குத்தான் இப்போது மக்கள் பதிலடி தந்துள்ளனர். இதேபோல கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும், தமிழகம் முழுக்கப் பிரசாரம் செய்ய அன்றைய தீய சக்தி தி.மு.க., நம்மை அனுமதித்து இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை மக்களிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.
நம்மைப் பொறுத்தவரை, என்றைக்கும் நாம் மக்கள் பக்கம்தான் நிற்போம். மக்களோடு மக்களாகத்தான் இரண்டறக் கலந்து இருப்போம். அது நம் கடமை மட்டுமன்று. மக்களுக்கான நமது நன்றிக் கடன் அது. எப்போதும் நம் தமிழக மக்களுக்காக முழுமூச்சுடன் நன்றி விசுவாசத்துடனேயே இருப்போம் என்பது நூறு சதவீதம் உறுதி.
இதையும் படிக்க : வெற்றி மீது வெற்றி வந்து எங்களை சேரும்.. அதை வாங்கி தந்த பெருமை தளபதியை சேரும்.. கே. ஏ. செங்கோட்டையன் உற்சாகம்!
இப்போதும் சொல்கிறேன். இந்த வெற்றி, தனிப்பட்ட இந்த விஜய்யின் வெற்றியோ, தனிப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியோ அல்ல. இது முழுக்க முழுக்கப் பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி. தரம் தாழ்ந்த வகையில் நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கு எதிரான வெற்றி. அப்பழுக்கற்ற தலைவர்களுக்கும் அவர்களின் தொண்டர்களுக்கும் செய்த துரோகத்திற்கு எதிரான வெற்றி.
மொத்தத்தில், அரசியல் நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. தனிமனித நாகரிகத்திற்குக் கிடைத்த வெற்றி. எல்லாவற்றுக்கும் மேலாக மக்களுக்குக் கிடைத்த வெற்றி. வாக்காளர்களுக்குக் கிடைத்த வெற்றி. இது இனிமேலும் தொடரும். தொடர்ந்தேதான் தீரும். மீண்டும் மீண்டும் இனிவரப் போகும் வெற்றிகளுக்கும் சேர்த்து இப்போதே நன்றி என்று தெரிவித்துள்ளார்.