வெற்றி மீது வெற்றி வந்து எங்களை சேரும்.. அதை வாங்கி தந்த பெருமை தளபதியை சேரும்.. கே. ஏ. செங்கோட்டையன் உற்சாகம்!
Minister K A Sengottaiyan : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் அபார வெற்றி பெற்றது தொடர்பாக அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் கூறியதை இந்தப் பதிவில் பார்க்கலாம் .
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி தொடர்பாக அந்த கட்சியின் நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கே. ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி தொடரும். வெற்றி மீது வெற்றி வந்து எங்களைச் சேரும்… அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் தளபதியை சேரும் என்று தெரிவித்தார்.
தவெக நல்லாட்சிக்கு இடைத்தேர்தல் வெற்றியை சாட்சி
தமிழகத்தில் தவெக ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதற்கு இந்த இடைத்தேர்தல் வெற்றியை சாட்சி ஆகும். தமிழகத்தில் எத்தனை தேர்தல்கள் நடந்தாலும் தமிழக வெற்றி கழகம் தான் வெற்றி பெறும். இதற்கு முத்தாய்ப்பாக இந்த வெற்றி வாய்ப்பு அமைந்துள்ளது. பத்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் தமிழக வெற்றி கழகம் வெற்றியடைந்துள்ளது. தமிழக மக்களை பொறுத்தவரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவரை வாழ்த்துகின்றனர். அவருடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.




பொதுத்தேர்தல்- இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் வேறுபடும்
தமிழகத்தை பொறுத்தவரை மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு யோசிப்பார்கள். வாக்கு எண்ணிக்கை என்பது பொது தேர்தலுக்கும், இடைத்தேர்தலுக்கும் மாறுபடும். இது அனைத்து இடங்களிலும் நடைபெறுகிற ஒன்றாகும். ஈரோட்டில் வாக்கு சதவீதம் 68 சதவீதம் தான் பதிவாகி இருந்தது. இடைத்தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்தை விரும்பி வாக்களிப்பது வேறாகும். இடைத்தேர்தல் வெற்றி என்பது எதிர்பார்த்த ஒன்றாகும். தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு பின்னால் இந்த நாடே உள்ளது. இந்த நாட்டு மக்கள் அவரை முழுமையாக நம்புகின்றனர். அவர்தான் முதல்வராக வரவேண்டும் என்று எண்ணுகின்றனர். பொறுத்திருந்து பாருங்கள் அதிமுகவை சேர்ந்தவர்கள் அங்கிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள் என்று தெரிவித்தார்.
அதிமுகவே சேர்ந்தவர்கள் தவெகவில் இணைவர்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் மரகதம் குமரவேல் 62,090 வாக்குகள் பெற்றிருந்தார். இதேபோல, தவெக வேட்பாளர் சத்தியபாமா 66 ஆயிரத்து 841 வாக்குகள் பெற்று வெற்றியை பதிவு செய்துள்ளனர். தமிழகமே பெரும் எதிர்பார்ப்புடன் பார்த்த இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக சென்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக விளங்கிய இரு தொகுதிகள் தமிழக வெற்றி கழகத்தின் கோட்டையாக மாறி உள்ளது.
மேலும் படிக்க: இரு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி முகம்.. ஆரவாரமின்றி காத்து வாங்கும் திமுக- அதிமுக- கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள்!