பயிற்சியின் போது நேர்ந்த விபரீதம்.. காட்டுத் தேனீக்கள் தாக்கி பேராசிரியர் பலி.. வேளாண் கல்லூரி மாணவர்கள் 13 பேர் காயம்!!
அங்குள்ள ரவிச்சந்திரன் ரெட்டியார் என்பவருக்குச் சொந்தமான எண்ணெய் பனை தோட்டத்தை பார்வையிடுவதற்காக, இரண்டு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த தேனீ வளர்ப்புப் பண்ணையை மாணவர்கள் சுற்றிப் பார்த்துள்ளனர். தொடர்ந்து, தேனீ வளர்ப்பு குறித்து மாணவர்கள் நிலத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.
கடலூர், ஜூலை 02: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கல்லூரி மாணவர்கள் மேற்கொண்ட விவசாயக் களப்பயணத்தின் போது, எதிர்பாராத விதமாக காட்டுத் தேனீக்கள் தாக்கியதில் தனியார் விவசாயக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒரு உதவிப் பேராசிரியர் மற்றும் 13 மாணவர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்கி வரும் ‘ஆதிபராசக்தி விவசாயக் கல்லூரி’யில் இரண்டாம் ஆண்டு டிப்ளமோ பயிலும் 18 மாணவர்கள், மற்றும் 2 பேராசிரியர்கள் என மொத்தம் 20 பேர் கொண்ட குழுவினர், தங்களின் கல்விசார் களப்பயணத்திற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோழிப்பாக்கம் கிராமத்திற்கு வந்திருந்தனர்.
மேலும் படிக்க: மதுரையில் நடுரோட்டில் பயங்கரம்.. திமுக பிரமுகர் வெட்டி சாய்ப்பு.. அலறிய நண்பர்.. தப்பியோடிய கும்பலைத் தேடும் போலீஸ்!
களப்பயணத்தில் நேர்ந்த விபரீதம்:
அங்குள்ள ரவிச்சந்திரன் ரெட்டியார் என்பவருக்குச் சொந்தமான எண்ணெய் பனை தோட்டத்தை பார்வையிடுவதற்காக, இரண்டு பேராசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த தேனீ வளர்ப்புப் பண்ணையை மாணவர்கள் சுற்றிப் பார்த்துள்ளனர். தொடர்ந்து, தேனீ வளர்ப்பு குறித்து மாணவர்கள் நிலத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து, பேராசிரியர் எஸ்.சுரேஷ் என்பவருடன் இணைந்து எண்ணெய் பனைத் தோட்டத்திற்குள் மாணவர்கள் சென்றபோது, அங்கிருந்த தேன்கூடு திடீரென கலைந்து பெருந்திரளான தேனீக்கள் அவர்களைக் கொடூரமாகத் தாக்கத் தொடங்கின.
பேராசிரியர் பரிதாப பலி:
தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் பேராசிரியர்களும், மாணவர்களும் அலறியடித்து ஓடினர். இதில் பலத்த காயமடைந்த அனைவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு பண்ருட்டி பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பேராசிரியர் எஸ். சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர். உயிரிழந்த சுரேஷ் பண்ருட்டி போலிஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
13 பேர் மருத்துவமனையில் அனுமதி:
இந்த தேனீத் தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு கல்லூரிப் பேராசிரியர் மற்றும் 13 மாணவர்கள் என மொத்தம் 14 பேர் பண்ருட்டி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்துப் பாதிப்படைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “மதியம் சுமார் 12.45 மணியளவில் திடீரென எங்கிருந்து காட்டுத் தேனீக்கள் வந்தது என்றே தெரியவில்லை. அவை எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்கத் தொடங்கின. நாங்கள் நின்ற பகுதி முழுவதும் வேலியால் சூழப்பட்டிருந்ததால் எங்களால் தப்பிக்க முடியவில்லை. இதில் எங்கள் பேராசிரியர் உள்ளேயும் போக முடியாமல், வெளியேயும் வர முடியாமல் நடுவிலேயே மாட்டிக் கொண்டார்” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
மேலும் படிக்க: கோவையில் அராஜகம்.. நடுரோட்டில் முட்டி மோதி நின்ற தனியார் பேருந்துகள்.. பயணிகள் மரண பயம்!!
கல்விப் பயணமாக வந்த இடத்தில் தேனீக்கள் தாக்கி பேராசிரியர் உயிரிழந்த சம்பவம், சக மாணவர்களிடையேயும் கல்லூரி வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.