திருவண்ணாமலை புரட்டாசி பௌர்ணமி கிரிவலம்.. சொந்த ஊர் திரும்ப போதிய பேருந்து, ரயில் வசதியின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் திண்டாட்டம்!
Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை புரட்டாசி பௌர்ணமி கிரிவலத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், திரும்பிச் செல்ல போதிய பேருந்து மற்றும் ரயில் வசதிகள் இல்லாததால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் சிரமமும் ஏற்பட்டுள்ளது. பேருந்து கிடைக்காமல் உளுந்தூர்பேட்டையில் பக்தர்கள் விடிய விடிய காத்திருந்த நிலையில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ஜன்னல் வழியாக ஏறும் அவல நிலை உருவானது.
திருவண்ணாமலை, செப்.26: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர். பக்தர்களின் வருகை கணிசமாக அதிகரித்த போதிலும், அதற்கேற்ப போதுமான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படாததால், கிரிவலம் முடிந்து தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப முற்பட்ட பக்தர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதிய நிலையில், போதிய பேருந்துகள் இல்லாததாலும், ரயில்களில் இடம் கிடைக்காததாலும் பக்தர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.
இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அடுத்தடுத்து சரவெடி.. என்ட்ரி கொடுக்கும் அமலாக்கத்துறை? கலக்கத்தில் காவல்துறை அதிகாரிகள்!
விடிய விடிய காத்திருந்த பக்தர்கள்:
திருவண்ணாமலைக்குக் கிரிவலம் செல்ல விருத்தாச்சலம், திட்டக்குடி, நெய்வேலி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள், இணைப்பு நகரமான உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் குவிந்தனர். இருப்பினும், நள்ளிரவு முதல் அதிகாலை வரை திருவண்ணாமலை நோக்கிய போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பக்தர்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையத்திலேயே காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த ஓரிரு பேருந்துகளிலும் ஏற பொதுமக்கள் முண்டியடித்ததால் அங்கு கடும் தள்ளுமுள்ளு உருவானது. குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாத சூழலில், கைக்குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுடன் வந்த பக்தர்கள் விடிய விடிய பேருந்து நிலையத்திலேயே தவித்து நின்றனர்.
ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்:
மற்றொருபுறம், கிரிவலத்தை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். ரயில் நிலைய நடைமேடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்த நிலையில், அங்கு வந்த ரயில்களில் ஏறுவதற்கு பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர். கதவு வழியாக உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், ஆபத்தை உணராமல் சிலர் ரயிலின் ஜன்னல் கம்பிகள் வழியாகவே ஏறிப் பயணிக்க முயன்ற அவல காட்சி அரங்கேறியது.
இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கு.. காவல் அதிகாரிகள் மாற்றம்.. சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!!
சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்க கோரிக்கை:
ஒவ்வொரு பௌர்ணமி மற்றும் விசேஷ நாட்களிலும் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் குவிகின்றனர். இருப்பினும், பக்தர்களின் எண்ணிக்கையைக் கணித்து அதற்கேற்ப சிறப்புப் பேருந்துகளையும், கூடுதல் ரயில்களையும் இயக்க போக்குவரத்துத் துறையும் தென்னக ரயில்வேயும் நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இனிவரும் பௌர்ணமி நாட்களிலாவது உரிய அடிப்படை வசதிகளை மேற்கொள்வதோடு, கூடுதல் சிறப்புப் பேருந்துகளையும் சிறப்பு ரயில்களையும் தடையின்றி இயக்க வேண்டும் என ஆன்மீக அன்பர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.