Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிஎன்ஏ முடிவுகளால் அதிர்ச்சி… பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்குதண்டனை – நெல்லை நீதிமன்றம் அதிரடி

Death Penalty Verdict: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே 15 வயது சிறுமியை பெற்ற தந்தையே கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில் பெண்ணின் தந்தைக்கு மரண தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டிஎன்ஏ முடிவுகளால் அதிர்ச்சி… பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தைக்கு  தூக்குதண்டனை – நெல்லை நீதிமன்றம் அதிரடி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Jan 2026 16:23 PM IST

திருநெல்வேலி, ஜனவரி 5 : திருநெல்வேலி (Tirunelveli) மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜனவரி 5, 2026 அன்று  மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும், மரம் வெட்டும் தொழில் செய்து வந்த நபர், கடந்த 2024 ஆம் ஆண்டு, வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில், தனது இரண்டாவது மனைவிக்கு பிறந்த 15 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, சிறுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்ட நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பரிசோதனையில், சிறுமி ஐந்து மாத கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வள்ளியூர் மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர்.

இதையும் படிக்க : கேட்ச் பிடிக்கும்போது ஏற்பட்ட விபரீதம்…. கிரிக்கெட் விளையாடும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்

டிஎன்ஏ பரிசோதனையில் சிக்கிய தந்தை

விசாரணையின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், கருவில் இருந்த குழந்தையின் டிஎன்ஏ, குற்றம் சாட்டப்பட்ட நபரின் டிஎன்ஏவுடன் பொருந்தியது. இதன் மூலம், குற்றம் உறுதி செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு, திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஜனவரி 5, 2026 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சுரேஷ்குமார், தீர்ப்பில் தெரிவித்திருப்பதாவது, இந்த வழக்கில் குறைந்தபட்ச தண்டனை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். தனது சொந்த மகளை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிக்க : பச்சிளம் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய இளம் பெண்.. திருச்செந்தூரில் அதிர்ச்சி சம்பவம்!

தொடர்ந்து இரண்டாவது மரண தண்டனை

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இதே திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம், கடந்த 11 நாட்களுக்கு முன்பு, தனது மகளை கர்ப்பமாக்கிய மற்றொரு தந்தைக்கும் மரண தண்டனை விதித்திருந்தது. குறுகிய கால இடைவெளியில், ஒரே மாதிரியான குற்றங்களுக்கு இரண்டாவது முறையாக மரண தண்டனை வழங்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.. இந்த தீர்ப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை கடுமையாக கையாள வேண்டும் என்பதையும், இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதையும் வலியுறுத்தும் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.