கேட்ச் பிடிக்கும்போது ஏற்பட்ட விபரீதம்…. கிரிக்கெட் விளையாடும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்
Cricket Match Tragedy : புதுக்கோட்டை மாவட்டம் மானமேல்குடி பகுதியில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த இளைஞர் கேட்ச் பிடிக்க முயன்ற போது தாழ்வாக சென்ற மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை, ஜனவரி 4: புதுக்கோட்டை (Pudukottai) மாவட்டம் மானமேல்குடி அருகே ஜனவரி 4, 2026 அன்று நடைபெற்ற ஒரு துயர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட் (Cricket) விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மானமேல்குடிக்கு அருகே உள்ள ஒட்டன்கரை பகுதியைச் சேர்ந்தவர் சுமன். 22 வயதாகும் இளைஞர் சுமன், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நண்பர்களுடன் நேரத்தை கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 4, 2026 அவர் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.
கிரிக்கெட் விளையாடும்போது மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம்
விளையாட்டின் போது பேட்ஸ்மேன் பந்தை அடிக்க, பந்து உயரமாக சென்றிருக்கிறது. இந்த நிலையில் பந்தை பிடிக்க முயன்ற சுமன், எதிர்பாராத விதமாக தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த மின் கம்பியைத் தொட்டுள்ளார். இதனால், அவருக்கு மின்சாரம் தாக்கி, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மானமேல்குடி காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த சுமனின் உடல் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மானமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையும் படிக்க : நான் தான் கடவுள்.. கலசத்தில் இருந்த பாலை மேலே ஊற்றி பிரச்சனை செய்த நபர்.. சிதம்பரம் கோயிலில் பரபரப்பு..




இந்த துயர சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட இந்த எதிர்பாராத விபத்து, அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதில் சுமன் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரையும் நண்பர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
மின் கம்பிகள் தாழ்வாக உள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இத்தகைய விபத்துகள் மீண்டும் நடைபெறாமல் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மின் காம்பிகள் தாழ்வாக உள்ள பகுதியில் எச்சரிக்கை பலகை இல்லாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : அரசு மருத்துவமனையில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்…மருத்துவர்களுக்கு ஷாக் கொடுத்த சுகாதாரத்துறை!
இதே போல கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை சம்மட்டிபுரம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுவர்தன் (26) என்ற இளைஞர், மண்டேலா நகர் பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். குளிர்பான நிறுவன விற்பனையாளராகப் பணியாற்றி வந்த இவர், தண்ணீர் குடிக்க முயன்றபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவனியாபுரம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்துவிட்டு உடனியாக தண்ணீர் அருந்தாமல் சில நிமிடங்கள் ஓய்வெடுத்த பிறகு தண்ணீர் அருந்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.