சென்னையை அதிரவைத்த போலி நகை மோசடி.. 25-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கைவரிசை காட்டிய கும்பல் கைது!!
Fake gold loan fraud Chennai: சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட அரசு, தனியார் வங்கிகள் மற்றும் நகைக்கடன் நிறுவனங்களில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த மூன்று பேர் கும்பலை வடபழனி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கோடம்பாக்கத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து சிசிடிவி உதவியுடன் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி அம்பலமாகியுள்ளது.
சென்னை, நவ.26: சென்னை மற்றும் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் வங்கிகள், அதேபோன்று தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களில் போலி நகைகளை அடகு வைத்து தொடர் மோசடியில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் கும்பலை, வடபழனி உதவி ஆணையரின் தனிப்படை போலீசார் இன்று காலை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது வடபழனி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனத்தில் ஒருவர் போலி நகைகளை அடகு வைத்துள்ளார். ஆரம்பத்தில் அதனை அறியாத நிறுவன ஊழியர்கள் நகைகளைப் பெற்றுக்கொண்டு கடன் வழங்கியுள்ள நிலையில், பின்னர் நடைபெற்ற உயரதிகாரிகளின் தணிக்கையின்போது அவை போலி நகைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு; குற்றவாளியாகக் கருதக் கூடாது என கருத்து!
பிரவீண் கும்பல் குறித்த விவரங்கள்:
கோடம்பாக்கம் தனியார் நகைக்கடன் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த வடபழனி போலீசார், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் நகைகளை அடகு வைக்க வந்த நபர் மற்றும் அவருடன் வந்தவர்களைச் சிசிடிவி பதிவுகளின் உதவியுடன் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்தப் புலன் விசாரணையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல மோசடி நபர் எனக் கூறப்படும் பிரவீண் தலைமையிலான கும்பல்தான் இந்தத் திட்டமிட்ட மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து பிரவீண் மற்றும் அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட இரண்டு நபர்கள் என மொத்தம் மூன்று பேரைத் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
25-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கைவரிசை:
கைது செய்யப்பட்ட பிரவீண் உள்ளிட்ட மூவரிடமும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இந்தக் கும்பல் சென்னை மட்டுமின்றித் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள கிட்டத்தட்ட 25-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகளிலும், தனியார் நகைக்கடன் வழங்கும் நிறுவனங்களிலும் இதே பாணியில் போலி நகைகளை அடகு வைத்துப் பணம் பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், பிரவீண் மீது ஏற்கனவே இதேபோன்று போலி நகைகளைக் கொடுத்து மோசடி செய்ததாக ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு மழை இருக்கும்?
முழு நெட்வொர்க்கையும் பிடிக்க நடவடிக்கை:
போலி நகைகளைத் தயாரித்தது எப்படி, இதற்குப் பின்னணியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது மற்றும் எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்துக் காவல்துறை உயரதிகாரிகள் பிடிபட்ட மூன்று பேரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் போலி நகை மோசடி கும்பலின் முழு நெட்வொர்க்கையும் கண்டறிந்து, தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் வடபழனி தனிப்படை போலீசார் தீவிரமாகக் களமிறங்கியுள்ளனர். இந்தச் சம்பவம் வங்கிகள் மற்றும் நகைக்கடன் நிறுவனங்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.