AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக அரசைக் கண்டித்து டிசம்பர் 2-ல் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ADMK Announces Protest: தமிழகத்தில் தற்போது நிலவும் பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், அதிமுக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களிலும் டிசம்பர் 2-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசைக் கண்டித்து டிசம்பர் 2-ல் அதிமுக மாபெரும் ஆர்ப்பாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 26 Nov 2026 12:25 PM IST

நவம்பர் 26, 2026: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம், கொலை, கொள்ளை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கண்டித்து, டிசம்பர் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில், மாநிலத்தின் நிர்வாகம் மிகப்பெரிய அளவில் சீர்குலைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு; பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறி


காவிரி நீர் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கூலிப்படைகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்ட தவெக எம்எல்ஏ விவகாரம், துணை சபாநாயகர் மீதான புகார் உள்ளிட்டவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் படிக்க: “கொலையில் முடிந்த 8 ஆண்டு கால காதல் திருமணம்”.. கணவனே மனைவிக்கு செய்த கொடூரம்.. திடுக் பின்னணி!!

விலைவாசி உயர்வு; நிறைவேறாத தேர்தல் வாக்குறுதிகள்

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, தொடர் மின்வெட்டு ஆகியவற்றால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலின்போது அளித்த இலவச சிலிண்டர், விவசாயக் கடன் தள்ளுபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை தவெக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

டிசம்பர் 2-ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம்

இந்தப் பிரச்சினைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், அதிமுக அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களிலும் டிசம்பர் 2-ம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க: பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம்: ஆளுநரை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் புகார் மனு!

மாவட்டத் தலைமைக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிமுக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow Us