செக்கானூரணி காவல் நிலைய மரணம்.. சிசிடிவி காட்சிகள், அறிக்கைகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!
Checkanurani police station death: செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கைத் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவில், சிசிடிவி காட்சிகள், சிபிசிஐடி அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களைத் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை, நவ.26: செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மரண வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணம் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாகப் பரிசீலிக்கப்பட்டது. இந்த மரணத்தின் பின்னணி மற்றும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணை விவரங்கள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிக்க: சென்னையை அதிரவைத்த போலி நகை மோசடி.. 25-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கைவரிசை காட்டிய கும்பல் கைது!!
அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவு:
இந்த வழக்கில் பேரையூர் நடுவர் நீதிமன்ற நீதிபதி அறிக்கை, சிசிடிவி காட்சிகள், சிபிசிஐடி விசாரணை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை இறுதி அறிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல், உசிலம்பட்டி டிஎஸ்பி கேம்ப் அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இருந்தால் அந்தக் காட்சிகளையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அரசு தரப்பு முன்வைத்த வாதங்கள்:
விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன் மற்றும் கிளிட்டஸ் ஆகியோர், லாரி தீப்பிடித்தது குறித்துப் புகார் அளிக்க வந்த அவர் காவல் நிலையத்தில் முறையாக விசாரிக்கப்படாததால்தான் தூக்கிட்டுக் கொண்டதாகக் குற்றம் சாட்டினர்; மேலும், சிபிசிஐடி விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்றும், மூன்று காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் வாதிட்டனர். இதற்குப் பதிலளித்து அரசுத் தரப்பில் ஆஜரான தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர், காவல் நிலைய விசாரணையின்போது அவர் நல்ல உடல்நலத்துடன் இருந்ததற்கான சிசிடிவி காட்சிகள் உள்ளன என்றும், அவர் கழிவறைக்குச் சென்று தற்கொலை செய்து கொண்டார் என்றும், தற்போதைக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்.. விசாரணையை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு; குற்றவாளியாகக் கருதக் கூடாது என கருத்து!
நீதிபதிகளின் உத்தரவும் அடுத்தகட்டமும்:
முன்வைக்கப்பட்ட வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முழுமையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். சிபிசிஐடி விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் சிசிடிவி காட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட ரீதியான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.