விசாரணைக்கு அழைக்கப்படுபவர்களை துன்புறுத்தக் கூடாது! காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..
விசாரணை நடவடிக்கைகளின்போது சம்பந்தப்பட்ட நபரை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விசாரணை என்பது உண்மைகளை கண்டறிவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 10, 2026: விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைக்கப்படும் நபர்களை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், விசாரணை நடவடிக்கைகளை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு விதிகளை வகுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் தன்னைத் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு பின்னணி என்ன?
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி ஏராளமான வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருவதாக நீதிபதி குறிப்பிட்டார். காவல்துறையின் புலன் விசாரணை நடவடிக்கைகளில் நீதிமன்றம் வழக்கமாக தலையிடுவதில்லை என்றாலும், விசாரணை என்ற பெயரில் நடைபெறும் துன்புறுத்தல்களை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது எனவும் நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து, விசாரணைக்கு நபர்களை அழைப்பது தொடர்பாக பல்வேறு விதிகளை நீதிபதி வகுத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விசாரணைக்கு அழைக்கப்படும் நபருக்கு முறையாக சம்மன் அனுப்ப வேண்டும். அந்தச் சம்மனில், சம்பந்தப்பட்ட நபர் எந்தத் தேதியில், எந்த நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேச.. பேரவையில் குலுங்கி குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்.. நடந்தது என்ன?
அனைத்து நடவடிக்கைகளும் குறிப்பேட்டில் பதிவு செய்ய வேண்டும்:
மேலும், விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் காவல் நிலையத்திற்கு வந்தது முதல் விசாரணை நிறைவடைந்து அவர் வெளியேறும் வரை நடைபெறும் நடவடிக்கைகள் அனைத்தையும் காவல் நிலைய குறிப்பேட்டில் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
விசாரணைக்கு வரும் நபர்களை துன்புறுத்தக்கூடாது:
விசாரணை நடவடிக்கைகளின்போது சம்பந்தப்பட்ட நபரை எந்த வகையிலும் துன்புறுத்தக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். விசாரணை என்பது உண்மைகளை கண்டறிவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
காவல்துறையின் புலன் விசாரணையில் தேவையற்ற தலையீடு செய்யாமல், அதேநேரத்தில் விசாரணை என்ற பெயரில் தனிநபர்களின் உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த விதிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, காவல்துறை விசாரணை நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.