அமோனியா வாயு கசிவு விபத்து.. பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு.. துயர செய்தியோடு விடிந்தது தமிழகம்!
தற்போதைய நிலவரப்படி, நச்சு வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 19 பேர் இன்னும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவர் 'வென்டிலேட்டர்' உதவியோடு தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும் 10 பேர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை, ஜூலை 01: சென்னையில் அண்மையில் நடந்த அமோனியா வாயு கசிவு விபத்தின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த கோர விபத்தில் சிக்கி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் ஒரு பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்த நச்சு வாயு கசிவு விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் நச்சு வாயு பாதிப்புக்காக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சனா ஜுவாங்கா (25) என்ற இளம்பெண் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: இளைஞர்- இளம் பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? ஆணவ படுகொலையா? பரபரப்பில் மயிலாடுதுறை!
உயிரிழந்த வடமாநில தொழிலாளர்கள்:
நேற்று வரை இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக இருந்த நிலையில், இன்று இந்த பெண்ணின் உயிரிழப்போடு சேர்த்து பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த 17 பேரில் பெரும்பாலானோர் வாழ்வாதாரத்திற்காகத் தமிழகம் வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதன்படி, ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் 15 பேர், அசாம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களை சேர்ந்த தலா ஒருவர் ஆவர்.
விமானம் மூலம் சொந்த ஊர் செல்லும் உடல்கள்:
உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்குப் பின் உடனடியாக அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 13 பேரின் உடல்கள் விமானம் மூலமாக ஒடிசாவிற்கும், 2 பேரின் உடல்கள் அசாமிற்கும், ஒருவரது உடல் ஜார்க்கண்டிற்கும் அரசு மற்றும் சுகாதாரத் துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் 19 பேருக்குத் தீவிர சிகிச்சை:
தற்போதைய நிலவரப்படி, நச்சு வாயு கசிவால் பாதிக்கப்பட்ட 19 பேர் இன்னும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவர் ‘வென்டிலேட்டர்’ உதவியோடு தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும் 10 பேர் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து அவசர மருத்துவ உதவிகளையும் ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகமும், தமிழக சுகாதாரத் துறையும் முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றன.
மேலும் படிக்க: நெல்லை 3 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. காமுகனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்!
சொந்த ஊர் அனுப்பிவைக்கப்பட்ட தொழிலாளர்கள்:
இதனிடையே, பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 68 தொழிலாளர்கள் முழுமையாகக் குணமடைந்தனர். குணமடைந்த இந்தத் தொழிலாளர்கள் தற்காலிகமாகப் பெரியபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்றைய தினம் அந்த தொழிலாளர்கள் சிறப்பு ரயில் மூலம் தங்களது சொந்த மாநிலமான அசாமிற்குப் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.