கடன் தொல்லையால் கொடூரம்.. தருமபுரியில் மனைவியையும், மகளையும் கொன்று திமுக நிர்வாகி விபரீத முடிவு..
இதற்கு மேல் அவர்களை என்னால் கஷ்டப்படுத்த முடியாது. நான் அவர்களைக் கொலை செய்யவில்லை, என்னுடன் கூட்டிச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட கடன் சுமையால்தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்தேன். யாரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.
தருமபுரி, ஜூலை 01: கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் பள்ளிச் செல்லும் மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, திமுக நிர்வாகி ஒருவர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி கோட்டை கோவில் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சந்தோஷ் (45). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததோடு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமாரின் உதவியாளராகவும் பணியாற்றிய திமுக பிரமுகர் ஆவார். இவருக்கு சரண்யா (36) என்ற மனைவியும், சாத்விகா (14) என்ற மகளும் இருந்தனர்.
மேலும் படிக்க: நெல்லை 3 சிறுமிகள் வன்கொடுமை வழக்கு.. காமுகனின் தூக்கு தண்டனையை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்றம்!
பலரிடம் அதிகளவில் கடன்:
சந்தோஷ், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததுடன், ஆன்லைன் பங்குச் சந்தையிலும் முதலீடு செய்து வர்த்தகம் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக பலரிடம் அவர் பெருமளவில் கடன் வாங்கியதாகத் தெரிகிறது. ஆனால், தொழிலில் ஏற்பட்ட கடுமையான நஷ்டம் மற்றும் வட்டிச் சுமை காரணமாக அவரால் வாங்கிய கடனைத் திருப்பி அடைக்க முடியவில்லை. கடனைத் திருப்பிக் கேட்க வந்தவர்களின் நெருக்கடியாலும், தினந்தோறும் வந்த பண நெருக்கடியினாலும் சந்தோஷும் அவரது குடும்பத்தினரும் கடந்த சில நாட்களாகவே கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.
அடுத்தடுத்து அரங்கேறிய விபரீதம்:
கடன் நெருக்கடி எல்லை மீறியதால் தீவிர மன விரக்தியடைந்த சந்தோஷ், நேற்று காலை ஒரு கொடூரமான முடிவை எடுத்துள்ளார். அதன்படி, வீட்டில் இருந்த தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, காலை 10 மணியளவில் பள்ளிக்குச் சென்றிருந்த தனது 14 வயது மகள் சாத்விகாவை வீட்டிற்கு அழைத்து வந்து வந்து, அவரையுமே கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மனைவி மற்றும் மகளின் உடல்களை வீட்டிலேயே போட்டுவிட்டு வெளியேறிய சந்தோஷ், சேலம் – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்றுள்ளார். அங்கு வேகமாக வந்த லாரியின் முன்பாகப் பாய்ந்து அவரும் தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி:
தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்ததைத் தொடர்ந்து, சந்தோஷின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோதுதான் அவரது மனைவி மற்றும் மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. அடுத்தடுத்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டதைக் கண்டு அக்கம் பக்கத்தினரும் கட்சித் தோழர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தருமபுரி டவுன் காவல் நிலைய போலீசார், மூன்று பேரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காகத் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு முன்னதாக சந்தோஷ் ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்ற கோணத்திலும், இந்த விபரீத முடிவுக்குக் காரணமான அளவுக்கு அதிகமான வட்டி கேட்டு மிரட்டிய நபர்கள் யார் யார் என்பது குறித்தும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலைக்கு முன் வீடியோ:
கடைசி நிமிடங்கள் 🥲🥹💔 pic.twitter.com/W2X12rPif5
— Anshitha🫶💖🍉 (@Anshithaprincey) July 1, 2026
உயிரை மாய்த்துக் கொள்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பாக சந்தோஷ் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது, “நான் யாரையும் ஏமாற்றவில்லை. என் மனைவி, மகளை மகாராணி போல வைத்திருந்தேன். அவர்கள் இதுவரை வசதியாக வாழ்ந்துவிட்டார்கள். இதற்கு மேல் அவர்களை என்னால் கஷ்டப்படுத்த முடியாது. நான் அவர்களைக் கொலை செய்யவில்லை, என்னுடன் கூட்டிச் செல்கிறேன். எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட கடன் சுமையால்தான் பங்குச்சந்தையில் முதலீடு செய்தேன். யாரும் பங்குச்சந்தையில் முதலீடு செய்யாதீர்கள்! இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன். உறவினர்களும், நண்பர்களும் என்னை மன்னித்துவிடுங்கள்.” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: இளைஞர்- இளம் பெண் தூக்கில் சடலமாக மீட்பு.. தற்கொலையா? ஆணவ படுகொலையா? பரபரப்பில் மயிலாடுதுறை!
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)