AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தனியார் பஸ் பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா போடி – தாம்பரம் சிறப்பு ரயில்?

Bodi–Tambaram Weekly Special Train: தேனி மற்றும் மதுரை மாவட்ட மக்களின் சென்னை பயணத் தேவையை பூர்த்தி செய்த தாம்பரம் – போடி வாராந்திர சிறப்பு ரயிலின் சேவை ஜூன் 28-டன் நிறைவடைந்துள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி இந்த சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே உடனடியாக நீட்டிக்க அல்லது நிரந்தர ரயிலாக மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தனியார் பஸ் பகல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா போடி – தாம்பரம் சிறப்பு ரயில்?
கோப்பு புகைப்படம் Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Jul 2026 12:26 PM IST

தேனி, போடிநாயக்கனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் சென்னைக்கான பயணத் தேவையை நிறைவு செய்யும் நோக்கில் தெற்கு ரயில்வேயால் தாம்பரம் – போடிநாயக்கனூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06059/06060) இயக்கப்பட்டு வந்தது. இச்சிறப்பு ரயிலின் சேவைக்காலம் கடந்த ஜூன் 28-ஆம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. தென் மாவட்ட மக்களின் வார இறுதிப் பயணங்களுக்குப் பெரும் பக்கபலமாக இருந்த இந்த ரயிலின் சேவை நிறுத்தப்பட்டிருப்பது, தற்பொழுது பொதுமக்களிடையே பெரும் கவலையையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தினசரி ரயிலில் நீடிக்கும் கடும் கூட்ட நெரிசல்

தற்போது போடிநாயக்கனூர் மற்றும் சென்னை எழும்பூர் இடையே ‘போடி எக்ஸ்பிரஸ்’ (20601/20602) என்ற தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எனினும், வார இறுதி நாட்கள், பண்டிகைக் காலங்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களில் இந்த ரயிலில் பயணிக்க மாதக்கணக்கில் காத்திருப்போர் பட்டியல் (Waiting List) நீண்டு கொண்டே செல்கிறது. இந்த கடுமையான டிக்கெட் பற்றாக்குறைக்கு, வாரமொருமுறை இயக்கப்பட்ட தாம்பரம் சிறப்பு ரயில் ஒரு மிகச்சிறந்த மாற்றாக விளங்கியது. தற்பொழுது இச்சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், தினசரி ரயிலில் கூட்ட நெரிசல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வியாபாரிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்படும் பாதிப்பு

தேனி மற்றும் போடி சுற்றுவட்டாரப் பகுதிகள் ஏலக்காய், மிளகாய், மலைக்காய்கறிகள் மற்றும் ஜவுளி வணிகத்திற்குப் பெயர் பெற்றவை ஆகும். இந்த வாழ்வாதாரத் தொழில்கள் நிமித்தமாக வாரந்தோறும் நூற்றுக்கணக்கான சிறு மற்றும் பெரு வியாபாரிகள் சென்னைக்குத் தங்களின் விளைபொருட்களுடன் பயணித்து வருகின்றனர். இந்தச் சிறப்பு ரயில் சேவை நிறுத்தப்படுவதால், வியாபாரிகள் வேறு வழியின்றி தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்திப் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவார்கள். இது தேனி மாவட்டத்தின் உள்ளூர் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் நேரடியாகப் பாதிக்கும் என வர்த்தக அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

Also Read: கணவர்–மனைவி உறவில் ‘இம்பிரஸ்’ செய்வது காதலை அதிகரிக்குமா?

பயணிகளுக்கு உகந்த கால அட்டவணையின் முக்கியத்துவம்

இந்த வாராந்திர சிறப்பு ரயிலின் கால அட்டவணை பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை இரவு தாம்பரத்தில் இருந்தும், மறுமார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை போடியிலிருந்தும் இந்த ரயில் புறப்பட்டு வந்தது. சென்னையில் பணிபுரியும் ஐடி ஊழியர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் வார இறுதியில் சொந்த ஊருக்கு வந்து செல்லும் குடும்பத்தினருக்கு இக்கால அட்டவணை வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.

எனவே, தென் மாவட்ட மக்களின் நியாயமான போக்குவரத்துத் தேவையைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்தச் சிறப்பு ரயிலின் சேவையை நீட்டிக்க வேண்டும் அல்லது இதனை ஒரு நிரந்தர ரயிலாக மாற்ற வேண்டும் எனத் தேனி மாவட்டப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.

Follow Us