அரசு மருத்துவமனைகளில் QR Code மூலம் OP சீட்டு.. தமிழ்நாடு சுகாதாரத் துறையின் புதிய முயற்சி
அரசு மருத்துவமனைகளில் ஆன்லைன் OP சீட்டு வழங்கும் முறை, நோயாளிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கூட்ட நெரிசலைக் குறைத்து, மருத்துவச் சேவைகளை விரைவாகவும் திறமையாகவும் வழங்க உதவும் முக்கியமான டிஜிட்டல் முயற்சியாக இருக்கும் என்றும், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன் இந்த சேவை விரைவில் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
ஜூன் 26.2026: அரசு மருத்துவமனைகளின் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வருபவர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையைத் தவிர்க்கும் வகையில், ஆன்லைன் மூலம் OP சீட்டு வழங்கும் திட்டத்தின் சோதனை ஓட்டத்தை தமிழ்நாடு சுகாதாரத் துறை இன்று தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் தங்களது செல்போன் மூலம் QR குறியீட்டை (QR Code) ஸ்கேன் செய்து, ஆன்லைனில் OP சீட்டைப் பெற்று சிகிச்சை பெறும் சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.
ஆன்லைன் மூலம் OP சீட்
இதனுடன், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை (சென்னை), பெரியார் நகர் அரசு மருத்துவமனை, திருநெல்வேலி, சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும் இன்று முதல் இந்த சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் தினந்தோறும் புறநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பதிவு செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கில் இந்த டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்த பிறகு, ஆன்லைன் OP சீட்டு வழங்கும் முறை மாநிலம் முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: டிவிகே அமைச்சர் போதை பொருள் பயன்படுத்திய வீடியோ? பரபரப்பு விளக்கம்!
தற்போது பல தனியார் மருத்துவமனைகளில் நடைமுறையில் உள்ளதைப் போல, அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் தங்களது செல்போன் செயலி மூலம் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி முன்பதிவு (Appointment) செய்து, மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே OP சீட்டைப் பெற முடியும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருக்காது:
இதன் மூலம், நோயாளிகள் மருத்துவமனைக்கு நேரில் வந்து நீண்ட நேரம் வரிசையில் நின்று பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. வீட்டிலிருந்தபடியே OP சீட்டைப் பெற்று, குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவமனைக்கு வந்து மருத்துவரைச் சந்திக்கலாம்.
குறிப்பாக, வேலைக்குச் செல்வோர், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொலைதூர பகுதிகளில் இருந்து வருபவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பெரிதும் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு மருத்துவமனைகளில் ஆன்லைன் OP சீட்டு வழங்கும் முறை, நோயாளிகளின் நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, கூட்ட நெரிசலைக் குறைத்து, மருத்துவச் சேவைகளை விரைவாகவும் திறமையாகவும் வழங்க உதவும் முக்கியமான டிஜிட்டல் முயற்சியாக இருக்கும் என்றும், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன் இந்த சேவை விரைவில் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.