போதைப்பொருள் ஒழிப்பு.. சிறப்பாக செயல்பட்ட 15 காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு..
2026-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் காவல் பதக்கத்தை வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை கண்டறிதல், போதைப்பொருட்களை பறிமுதல் செய்தல், குற்றவாளிகளை கைது செய்தல், இளைஞர்களை போதைப்பழக்கத்தில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமலாக்கப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது
ஜூன் 26, 2026: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோதக் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்ட 15 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு:
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி, விற்பனை, சட்டவிரோதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகளில் சிறப்பாகப் பணியாற்றி, குற்றத் தடுப்பு மற்றும் புலனாய்வுப் பணிகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை கவுரவிக்கும் வகையில் “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தல் ஒழிப்பு சிறப்புப் பணிக்கான முதலமைச்சரின் காவல் பதக்கம்” 2023-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2026-ஆம் ஆண்டுக்கான முதலமைச்சரின் காவல் பதக்கத்தை வழங்க முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை கண்டறிதல், போதைப்பொருட்களை பறிமுதல் செய்தல், குற்றவாளிகளை கைது செய்தல், இளைஞர்களை போதைப்பழக்கத்தில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் மற்றும் சட்ட அமலாக்கப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
பதக்கம் பெரும் 15 காவலர்களின் விவரங்கள்:
பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) விவேகானந்தன், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், சென்னை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் லட்சுமணன், காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார், திருச்சி மண்டல காவல் ஆய்வாளர் கண்ணன், கோவை மண்டல காவல் ஆய்வாளர் காமராஜ், தேனி மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் அருண், குமுளி தலைமை காவலர் ராஜ்குமார்,
நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்காரனிருப்பு தலைமை காவலர் கார்த்திகேயன், திருப்பூர் நல்லூர் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) ராமர், நெல்லை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமை காவலர் ஐயப்பன், சென்னை அசோக் நகர் தலைமை காவலர் பிரேம்குமார் உள்ளிட்ட மொத்தம் 15 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் படிக்க: தலைவர்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது’.. முதலமைச்சர் விஜய்யை பாராட்டிய தமிழிசை சௌந்தராஜன்..
இந்த முதலமைச்சரின் காவல் பதக்கம், 2026-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் அரசு விழாவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு – முக்கிய இலக்கு:
போதைப்பொருள் ஒழிப்பை தமிழக அரசின் முக்கிய இலக்காகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சிறப்பாகப் பணியாற்றும் காவல் துறையினரை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருது வழங்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இதுபோன்ற கவுரவங்கள் காவல் துறையினரின் அர்ப்பணிப்பு உணர்வை மேம்படுத்துவதோடு, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த உதவும் என்றும் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.