ஒரே நாளில் ஐந்து நிறங்களில் மாறும் சிவலிங்கம் – தமிழ்நாட்டின் களியாணசுந்தரேஸ்வரர் கோவிலின் அதிசயம்
Kalyanasundaresar Temple : தஞ்சாவூர் மாவட்டம் நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்களை நாள்தோறும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. காரணம் இந்த கோவிலில் வழிபடப்படும் சிவலிங்கம், ஒரே நாளில் ஐந்து முறை நிறம் மாறுவதாக பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.
தஞ்சாவூர், ஜனவரி 31 : தஞ்சாவூர் மாவட்டம் நல்லூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்களை நாள்தோறும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது. இந்த கோவிலில் வழிபடப்படும் சிவலிங்கம், ஒரே நாளில் ஐந்து முறை நிறம் மாறுவதாக பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் கூறுகின்றனர். நேரத்துக்கு ஏற்ப சிவலிங்கத்தின் நிறம் மாறுவதாகக் கூறப்படும் நிகழ்வு இந்த கோவிலின் முக்கிய சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதனைக் காண தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் சோழர் காலத்தில் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
நேரத்துக்கு ஏற்ப நிறம் சிவலிங்கம்
இந்த கோவிலில் அமைந்துள்ள கல்யாணசுந்தரேஸ்வரர் என்ற பெயருடைய சிவலிங்கம் காலையில் கருப்பு நிறமாகவும், மதியம் வெள்ளை நிறமாகவும், மாலையில் சிகப்பு நிறமாகவும், இரவில் இள நீல நிறமாகவும், நள்ளிரவில் பச்சை நிறமாகவும் என ஒரே நாளில் 5 வெவ்வேறு நிறங்களில் மாறுவதாக கூறப்படுகிறது. அதன் படி அங்கு ஒவ்வொரு நேரத்திலும் தரிசனம் செய்யும் பக்தர்கள், வெவ்வேறு நிறங்களில் உள்ள சிவலிங்கத்தை காண முடியும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இதனால், நாளின் பல நேரங்களிலும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு
இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழ பேரரசர் ராஜராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. காலப்போக்கில் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கோவிலின் ஆன்மிக மரபுகளும் வழிபாட்டு முறைகளும் மாற்றமின்றி பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இங்கு சிவபெருமான் கல்யாணசுந்தரேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மேலும், இந்த கோவிலில் உள்ள முருகப்பெருமானுக்கும் தனி முக்கியத்துவம் உள்ளது. இதனால், சிவன் மற்றும் முருக பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து தரிசனம் மேற்கொள்கின்றனர்.
இந்த கோவிலில் இரண்டு கருப்பு கல்லால் செய்யப்பட்ட சிவலிங்கங்கள் உள்ளது. முதலில், கருவறையில் தங்க அலங்காரத்துடன் இருக்கும் சிவலிங்கம், மற்றொன்று, கோவில் நுழைவாயிலருகே அமைந்துள்ள லிங்கம் என இரண்டு லிங்கங்கள் அமைந்துள்ளது இந்த கோவிலின் சிறப்பு. கோவிலின் நுழைவாயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு தினமும் காலை சந்தனக்காப்பு செய்யப்படுகிறது. மதிய நேரத்தில் அந்த சந்தனத்தின் மணம், பக்தர்களை வரவேற்கும் விதமாக திகழ்கிறது.
இந்த கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கால பூஜையிலும் சிவபெருமான் வெவ்வேறு ரூபங்களில் அருள்பாலிப்பதாக நம்பப்படுகிறது. காலை வேளையில் வைத்தியநாதர் ரூபத்தில், நந்தியுடன் சிவபெருமான் தரிசனம் தருவதாக பக்தர்கள் கூறுகின்றனர். சிவலிங்கத்தின் நிறமாற்றத்திற்கு இதுவரை எந்த அறிவியல் விளக்கமும் வழங்கப்படவில்லை. மனிதர்கள் முயற்சி ஏதும் இல்லாமல், இயல்பாகவே இந்த மாற்றம் நிகழ்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதுவே, இந்த கோவிலின் ஆன்மிக மகத்துவத்தை மேலும் உயர்த்துகிறது.



