இன்று தை வெள்ளி, சுக்ர வார பிரதோஷம்.. பணவரவு அதிகரிக்க வீட்டில் இதை தவறாமல் செய்யுங்க..
சிவபெருமான் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்வது பொருளாதார முன்னேற்றத்தைத் தரும். கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள், வீட்டில் சிவனின் படம் முன் விளக்கேற்றி வழிபடலாம். பச்சரிசி மற்றும் சர்க்கரையை பொடி செய்து படைத்துவிட்டு, அதை எறும்புகளுக்கு உணவாகப் போடுவது உங்கள் கர்ம வினைகளைக் குறைக்கும்.

இன்று ஜனவரி 30, தை மாதம் 16-ஆம் தேதி நிறைஞ்ச வெள்ளிக்கிழமை. வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமி தாயாருக்கும், அவர்களின் அம்சமாக விளங்கும் சுக்கிர பகவானுக்கும் உரிய நாள். அதுவும் தை மாதத்தில் வரும் வளர்பிறை வெள்ளிக்கிழமை என்பதால், இந்த நாளுக்கு கூடுதல் விசேஷம் உண்டு. இந்த நாளின் சிறப்பை மேலும் உயர்த்தும் வகையில், இன்று தை மாத வளர்பிறை பிரதோஷமும் வருகிறது. வளர்பிறை பிரதோஷ நாளில் சிவபெருமானையோ, நந்தி பகவானையோ மனமார வழிபட்டு, வளமான வாழ்க்கைக்குத் தேவையானவற்றை வேண்டிக்கொண்டால், அவை நிச்சயமாக நிறைவேறும் என்று கூறப்படுகிறது. சிவபெருமான் கோவில் அருகில் இருப்பவர்கள், மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ள பிரதோஷ நேரத்தில் தரிசனம் செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும்.

6 மணிக்குப் பிறகு வழிபாடு செய்தால், அது அந்தி வேளை வழிபாடாக மட்டுமே கருதப்படும்; பிரதோஷ வழிபாட்டின் முழு பலன் கிடைக்காது. எனவே அந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் சிவபெருமான் தரிசனம் செய்து, அபிஷேகம், அலங்காரம் ஆகியவற்றை பார்த்து, முழு மனதுடன் வழிபடுவது வாழ்க்கையில் நல்ல பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும். இந்த வழிபாட்டிற்கு பால், விபூதி, வில்வ இலை, அரிசி மாவு போன்ற பொருட்களை கோவிலில் வழங்குவது சிறப்பாகும்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே மாலை 4:30 முதல் 6:00 மணி வரை சிவபெருமான் படத்தை சுத்தம் செய்து, சந்தனம் குங்குமம் வைத்து, ஒரு தீபம் ஏற்றி வழிபடலாம். இந்த நேரத்தில், அரிசி மற்றும் சர்க்கரையை பொடியாக்கி ஒரு தட்டில் வைத்து சிவபெருமானுக்கு நைவேத்யமாக அர்ப்பணித்து, வேண்டுதல் நிறைவேறிய பின் அந்தப் பொடியை மரம் அல்லது செடி அடியில் இடுவது கர்ம வினைகளை குறைக்கும் என்று நம்பப்படுகிறது. எறும்புகள் அந்தப் பொடியை சுலபமாக உண்ணும் அளவுக்கு, வாழ்க்கையில் உள்ள கடுமையான பிரச்சனைகளும் சுலபமாக தீரும் என்பது ஐதீகம்.

இன்றைய நாளுக்கான சிறப்பு பரிகாரம் இரவில் செய்ய வேண்டிய ஒரு எளிய முறையாகும். இந்த பரிகாரத்திற்கு உள்ளங்கை அளவிலான மஞ்சள் நிற துணி தேவை. மஞ்சள் நிறம் குருபகவானுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் உகந்த நிறமாகும். மஞ்சள் துணி இல்லையெனில், வெள்ளை துணியில் மஞ்சள் கலந்த நீரைப் பூசி பயன்படுத்தலாம். அந்த துணியில் ஒரு ஸ்பூன் கல்லுப்பை வைக்க வேண்டும். இந்த கல்லுப்பு சமையலுக்குப் பயன்படுத்தாத புதியதாக இருக்க வேண்டும். இத்துடன் நல்ல நிலையில் இருக்கும் ஒரு ஏலக்காயையும் சேர்க்க வேண்டும். ஏலக்காய் பணவசியம் கொண்ட பொருளாகக் கருதப்படுகிறது. சிவப்பு அல்லது நீல பேனாவால் அந்த ஏலக்காயின் மீது “520” என்ற எண்ணை எழுத வேண்டும். பின்னர் ஒரு ரூபாய் நாணயத்தையும் சேர்த்து, கல்லுப்பு, ஏலக்காய், ரூபாய் நாணயம் ஆகிய மூன்றையும் மஞ்சள் துணியில் சிறிய முடிச்சாகக் கட்ட வேண்டும்.

இந்த முடிச்சை இடது உள்ளங்கையில் வைத்து, வலது கையால் மூடி கண்களை மூடி, “நான்கு திசைகளிலிருந்தும் நான் பணத்தை ஈர்க்கிறேன். தினந்தோறும் என்னைத் தேடி பணம் வந்து கொண்டே இருக்கிறது. என் வீட்டில் அளவில்லாமல் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கிறது” என்ற போன்ற நேர்மறை உறுதிமொழிகளை சொல்ல வேண்டும். பின் அந்த முடிச்சை தலைகாணிக்கடியில் வைத்து தூங்க வேண்டும். இது ஒரு வாரம் அப்படியே இருக்கட்டும். இதனால் மனதில் உள்ள பணம் தொடர்பான எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, பணவரவு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஒரு வாரம் கழித்து, அடுத்த வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அந்த முடிச்சை அவிழ்த்து, கல்லுப்பை கழுவி நீரில் விடலாம். ஏலக்காயை சாம்பிராணி தூபத்தில் போடலாம். ஒரு ரூபாய் நாணயத்தை மங்கள பொருட்கள் வாங்க பயன்படுத்துவது சிறந்தது. இன்று சுக்கிரவார பிரதோஷம் என்பதால், இந்த நாளில் இந்த பரிகாரத்தை செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.