‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. தகுதியானவர்கள் யார் யார்?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!!
பிரசவப் பதிவுகள், ஆதார் மற்றும் PICME போர்ட்டலுடன் இணைக்கப்பட்ட தாயின் RCH ID மூலம் தகுதி நிலை இறுதி செய்யப்படும். தங்க மோதிரம் வழங்கப்பட்டவுடன், அதற்கான பயோமெட்ரிக் ஒப்புகை நேரடியாகப் பயனாளியிடம் இருந்து பெறப்பட்டு PICME இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.
சென்னை, ஜுன் 25: தமிழக அரசுப் பொது மருத்துவமனைகளில் பிறக்கும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்காக, முதலமைச்சரின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழர் பாரம்பரியத்தில் ‘தாய்மாமன் சீர்’ என்ற உன்னத மரபின்படி, தமிழக அரசே ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் பங்கை ஏற்று இந்த அன்பளிப்பை வழங்குகிறது. இத்திட்டத்திற்கான விரிவான தகுதி வரம்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்த அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக சுகாதாரத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க: வெறும் ரூ.75-க்கு பிவிசி ஆதார் கார்டு.. வீட்டில் இருந்தே சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்!
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் புதுமுகக் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்படும். இத்திட்டம் அதிகாரப்பூர்வமாகத் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் முறைப்படி தொடங்கி வைக்கப்படவுள்ளது. இருப்பினும், முதலமைச்சரின் பிறந்தநாளான ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் இத்திட்டம் பின்னோக்கிப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உன்னத நோக்கத்திற்காகத் தமிழக அரசு முதற்கட்டமாக 750 கோடி ரூபாய் நிதியைச் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.
யாரெல்லாம் தகுதியானவர்கள்?
குழந்தை கண்டிப்பாகத் தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அல்லது ஆரம்பச் சுகாதார நிலையங்களில் (PHC) பிறந்திருக்க வேண்டும். குழந்தையின் தாய், தமிழகத்தின் நிரந்தரக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
இத்திட்டத்தின் பயனைப் பெறப் பயனாளிகள் தனியாக எங்கும் அலைந்து விண்ணப்பிக்கத் தேவையில்லை. பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கும் போதே, அங்கிருக்கும் ஒருங்கிணைப்பு அதிகாரியிடம் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். உள்ளூர் சுகாதார நிலையங்கள் மூலம் பெறப்படும் இனப்பெருக்க மற்றும் குழந்தை சுகாதார அடையாள எண் (RCH ID) மற்றும் PICME போர்ட்டலில் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.
இருப்பிடச் சான்று:
தமிழகத்தில் வசிப்பதற்கான ஆதாரமாக குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை, அஞ்சலக முகவரிச் சான்று அட்டை, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஓர் அரசு ஆவணத்தை வழங்க வேண்டும்.
விநியோகிக்கப்படும் நவீன நடைமுறை:
பயனாளிகளுக்கு மோதிரங்கள் தங்குதடையின்றியும், முறைகேடுகள் இல்லாமலும் நேரடியாகச் சென்றடைய அதிநவீன தொழில்நுட்ப முறைகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதையொட்டி, அரசு மருத்துவமனையிலிருந்து தாய் மற்றும் குழந்தை வீடு திரும்பும் போது வழங்கப்படும் டிஸ்சார்ஜ் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும். முறைகேடுகளைத் தவிர்க்க, குழந்தையின் தாயின் இருப்பிட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், இரட்டை முக அங்கீகார அமைப்பு (Face Recognition) மற்றும் கருவிழிப் படலம் மூலம் தாயின் அடையாளம் உறுதி செய்யப்படும்.
பிரசவப் பதிவுகள், ஆதார் மற்றும் PICME போர்ட்டலுடன் இணைக்கப்பட்ட தாயின் RCH ID மூலம் தகுதி நிலை இறுதி செய்யப்படும். தங்க மோதிரம் வழங்கப்பட்டவுடன், அதற்கான பயோமெட்ரிக் ஒப்புகை நேரடியாகப் பயனாளியிடம் இருந்து பெறப்பட்டு PICME இணையதளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்படும்.
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வழிமுறைகள்:
ஆண்டுதோறும் நிகழும் பிரசவங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, தமிழ்நாடு மருத்துவச் சேவைக் கழகம் மூலம் இந்தத் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படும். மோதிரங்கள் விநியோகத்தில் எவ்வித முறைகேடோ அல்லது திருட்டோ நடக்காமல் தடுக்க, பிராந்திய மையங்களில் 24 மணி நேர சிசிடிவி ண்காணிப்புடன் கூடிய இரு அடுக்கு பாதுகாப்பு அமைப்பில் இவை பாதுகாப்பாக வைக்கப்படும். மருத்துவமனை கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவக் கண்காணிப்பு அதிகாரிகள் விநியோகத்தை நேரடியாகக் கண்காணிப்பார்கள்.
மேலும் படிக்க: சீமானிடம் தோளில் கைபோட்டு, சீரியஸாக டிஸ்கஸ் செய்த மு.க.ஸ்டாலின்.. ஒரே சோபாவில் 3 ஜாம்பவான்கள்..
மேலும், தகுதியான குடும்பங்களுக்குப் பலன்கள் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்ய மாநில அளவிலான ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஏழை எளிய மக்களின் பிரசவ காலச் சுமையைக் குறைக்கும் விதமாகவும், அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டு வரப்பட்டுள்ள இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.