டாஸ்மாக் ஊழியர்களின் பணிச்சுமைக்கு முற்றுப்புள்ளி.. காலி பாட்டில்களைப் பெற வருகிறது ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’!
TASMAC Bottle Buyback Scheme: டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் பணியாளர்களின் சுமையைக் குறைக்கும் வகையில் 'ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்' எந்திரங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 11: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், குறிப்பாக மலைப்பிரதேசங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி மது பாட்டில்கள் வீசியெறியப்படுவதைத் தடுக்கவும் டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. மது பாட்டில்களை வாங்கும் போது கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்பட்டு, பின்னர் காலி பாட்டில்களைத் திரும்பத் தரும் போது அந்தப் பணம் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மலைப்பகுதிகளில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பின்னர் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் மிக முக்கியமான புதிய தொழில்நுட்ப மாற்றத்தைக்கொண்டு வரத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க: பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம்.. எதிர்க்கும் அரசியல் தலைவர்கள்.. பின்னணி என்ன?
காலி பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்:
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், இத்திட்டம் தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ஜூலை 31-ஆம் தேதி வரை திரும்பப் பெறப்பட்ட காலி பாட்டில்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றை மறுசுழற்சி/விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த தொகை குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்:
தொடர்ந்து வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர், காலி பாட்டில்களை நேரில் பெற்றுப் பணத்தைத் திரும்ப அளிப்பதில் ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்களைக் தவிர்க்கும் பொருட்டு, ‘ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்’ என்ற தானியங்கி எந்திரங்களை நிறுவ டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், இ எந்திரங்களை நிறுவுவது தொடர்பான முன்னேற்ற அறிக்கையைத் தாக்கல் செய்ய 3 மாத கால அவகாசம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க: “எங்கே சென்றது சிங்கப்பெண் படை?”.. ஒரே நாளில் அடுத்தடுத்த பாலியல் குற்றங்கள்.. வானதி சீனிவாசன் சரமாரி கேள்வி!
3 மாத கால அவகாசம்:
அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், 3 மாத கால அவகாசம் வழங்கிய அதே வேளையில், மூன்று மாதங்களுக்குக் காத்திருக்காமல் எந்திரங்களை நிறுவும் நடைமுறைகளை முடிந்தவரை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். மேலும், எந்திரங்கள் நடைமுறைக்கு வரும் வரை தற்போது உள்ள நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.