பள்ளிகளில் அமலுக்கு வந்தது திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை.. இனி வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி கட்டாயம்!!
TN Schools Revised Timetable: தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் உடல் மற்றும் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட புதிய கால அட்டவணை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 1 முதல் 10ஆம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடல் கல்வி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அக்டோபர், 23: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கல்வி வளர்ச்சியோடு அவர்களின் உடல் நலன் மற்றும் உளவியல் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தற்பொழுது திருத்தப்பட்ட புதிய பள்ளி கால அட்டவணையை அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சீரான கல்விச் சூழல் உருவாக்கப்படுவதோடு, மாணவர்களின் ஒட்டுமொத்தத் திறனை மேம்படுத்தும் வகையில் வகுப்பறை நேரங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: ஆர்.ஏ.புரம் அரசு இல்லத்திற்கு மாறுகிறாரா முதல்வர் விஜய்?.. பொதிகை வளாக வீட்டில் தீவிரமடையும் புனரமைப்புப் பணிகள்.. முழு விவரம்!!
பாடவேளைகளின் விபரங்கள்:
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, இனி பள்ளிகள் காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை முழுமையாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் வகுப்பு நிலைகளுக்கு ஏற்ப பாடவேளைகளின் கால அளவுகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு பாடவேளை 90 நிமிடங்களாகவும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு பாடவேளை 45 நிமிடங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், கணி மற்றும் அறிவியல் போன்ற முக்கியப் பாடங்களுக்குக் கூடுதல் பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளதன் மூலம் மாணவர்கள் கடினமான பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உடற்கல்விக்கு கட்டாய ஒதுக்கீடு:
புதிய கால அட்டவணையின் மிக முக்கியமான சிறப்பம்சமாக, 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் உடற்கல்வி வகுப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இசை, கலை, கைவினை, நூலகம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இணையவழி கல்வி ஆகியவற்றுக்கும் பிரத்யேகப் பாடவேளைகள் ஒதுக்கப்பட்டு மாணவ-மாணவிகளின் பன்முகத் திறன்கள் ஊக்கப்படுத்தப்பட உள்ளன. இதேபோல், மேல்நிலைக் கல்வி பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்தில் 2 உடற்கல்வி வகுப்புகளும், 2 கல்வி இணை செயல்பாட்டு வகுப்புகளும் ஒதுக்கப்பட்டு அவர்களின் எதிர்கால நலன் பாதுகாக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: அரசியல் கட்சியாக மாறும் வீ த லீடர்ஸ்.. தமிழகத்தில் உண்மையான மாற்று அரசியல் வரும்.. மகளிர் மாநாட்டில் அண்ணாமலை அதிரடி!
கல்வித்துறையின் மாற்றத்திற்கு வரவேற்பு:
மாணவர்கள் வகுப்பறைகளில் தொடர்ந்து அதிக நேரம் அமர்ந்து படித்து மன அழுத்தத்திற்கு ஆளாவதைத் தவிர்க்கும் வகையிலும், விளையாட்டின் மூலமும் கலைகளின் மூலமும் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றத்திற்குப் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய கால அட்டவணை அனைத்துப் பள்ளிகளிலும் முழுமையாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்குப் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதுடன், இது எதிர்காலத் தலைமுறையினரின் ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.