தலைமைச் செயலகத்தை மாற்ற தமிழக அரசு திட்டம்.. புதிய இடங்களைத் தேர்வு செய்வதில் மும்முரம்!!
TN Govt Plans New Secretariat: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் கடும் இடப்பற்றாக்குறை நிலவுவதால், புதிய தலைமைச் செயலகம் அமைக்கக் கிண்டி ரேஸ் கிளப் நிலம், தீவுத்திடல் மற்றும் கோயம்பேடு ஆகிய 3 முக்கிய இடங்களைத் தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது.
சென்னை, ஆகஸ்ட் 01: தமிழ்நாடு அரசின் நிர்வாக மையமாக இயங்கி வரும் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் கடும் இடப்பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், நகருக்குள் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக 3 முக்கிய இடங்களைத் தமிழ்நாடு அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே, தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் அலுவலகம், விரைவில் அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மேலும் படிக்க: தாய் என்றும் பார்க்கவில்லை.. தம்பி என்றும் நினைக்கவில்லை.. ரூ.1 கோடிக்காக அண்ணா நகரில் அரங்கேறிய இரட்டை கொலை!
புனித ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை:
தற்போது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பாரம்பரியக் கட்டிடத்தில் கடுமையான இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது. பாரம்பரியக் கட்டிடங்களுக்கான பாதுகாப்பு விதிகளின் காரணமாக, புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் புதிய கட்டுமானங்களை அமைப்பதோ அல்லது எதிர்கால விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வதோ சாத்தியமில்லாத சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக, நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
பரிசீலனையில் உள்ள 3 முக்கிய இடங்கள்:
புதிய தலைமைச் செயலகத்தைக் கட்ட சென்னை நகரின் மையப் பகுதியில் உள்ள மூன்று பிரதான இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சுமார் 161 ஏக்கர் பரப்பளவு கொண்ட கிண்டி ரேஸ் கிளப் வளாக நிலம். அண்ணாசாலை அருகே அமைந்துள்ள சுமார் 135 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அரசு நிலமான தீவுத் திடல் வளாகம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பின் காலியாக உள்ள சுமார் 37 ஏக்கர் பரப்பளவு கொண்ட கோயம்பேடு பகுதி.
இந்த மூன்று இடங்களில் போக்குவரத்து வசதி, இடவசதி மற்றும் எதிர்கால விரிவாக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இறுதி இடம் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடமாறும் முதல்வர் அலுவலகம்:
ஏற்கெனவே, தமிழ்நாடு தலைமைச் செயலகத்தின் மையப் பகுதியான புனித ஜார்ஜ் கோட்டை பழமையான முதன்மைக் கட்டிடத்தில் பல தசாப்தங்களாக இயங்கி வந்த முதலமைச்சர் அலுவலகம், விரைவில் அருகில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான புதுப்பித்தல் மற்றும் நவீன மறுசீரமைப்புப் பணிகள் தற்போது மிக வேகமாகக் கட்டமைப்புத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: பழனி கோயில் நில முறைகேடு வழக்கு.. ஆய்வு செய்வதற்காக 6 பேர் கொண்ட குழு அமைப்பு!
நவீன தொழில்முறை வசதிகள்:
10-வது தளத்தின் கிழக்குப் பகுதியில் அமையவிருக்கும் முதலமைச்சரின் முதன்மை அறை, வங்கக் கடலின் அழகிய தோற்றத்தை நேராகப் பார்க்கும் வகையில் கண்ணாடியிலான நவீன அமைப்புகளுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது. ஏற்கனவே 10-வது தளத்தில் அமைந்திருந்த பெரிய கலந்தாய்வுக் கூடம் இடிக்கப்பட்டு, அங்கிருந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அலுவலகங்கள் கலைவாணர் அரங்கத்திற்கு முழுமையாக இடமாற்றம் செய்யப்படுகின்றன.