குற்றால அருவிகளில் அதிகரித்த நீர்வரத்து.. சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை..
அடுத்த சில நாட்களும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், நீர்வரத்தின் நிலையைப் பொறுத்து அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படுமா அல்லது தடை நீடிக்குமா என்பது குறித்து அதிகாரிகள் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 1, 2026: தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்திற்கு, குறிப்பாக தென்மேற்கு பருவமழைக் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.
தொடங்கிய குற்றால சீசன்:
குற்றால சீசன் பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்தக் காலகட்டத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து சீராக இருந்தால், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்வார்கள்.
மேலும் படிக்க: தாம்பரம் – தூத்துக்குடி கோடைக்கால சிறப்பு ரயில்.. மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
கடந்த சில வாரங்களாக குற்றால அருவிகளில் நீர்வரத்து கணிசமாக குறைந்திருந்தது. ஆனால், கடந்த மூன்று நாட்களாக குற்றாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், அடுத்த சில நாட்களுக்கும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அருவிகளில் குளிக்க தடை:
இந்தச் சூழலில், மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வழக்கத்தை விட அதிகளவில் தண்ணீர் வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு குளிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை நீர்வரத்து அதிகரித்ததால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மாலையில் நீர்வரத்து சீரானதைத் தொடர்ந்து மீண்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: “சிக்கன் பிரியாணி சாப்பிட்டா குழந்தைங்க கெட்டுப்போயிடுவாங்களா?”.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
இந்நிலையில், அடுத்த சில நாட்களும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், நீர்வரத்தின் நிலையைப் பொறுத்து அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படுமா அல்லது தடை நீடிக்குமா என்பது குறித்து அதிகாரிகள் அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப மாற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.