AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“2010-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்!”.. சட்டமன்றத்தில் அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றம்!

TET Exemption Resolution: 2010 ஆகஸ்ட் 23-க்கு முன் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்து, 3.28 லட்சம் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

“2010-க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்!”.. சட்டமன்றத்தில் அரசு தனித் தீர்மானம் நிறைவேற்றம்!
அமைச்சர் ராஜ்மோகன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 25 Aug 2026 10:37 AM IST

சென்னை, ஆகஸ்ட் 25: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், அரசுப் பள்ளிகளில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் மிக முக்கியமான அரசினர் தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-க்கு முன்னதாக அன்றைய நடைமுறையில் இருந்த தகுதிகளின் அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) இருந்து முழுமையான மற்றும் நிரந்தர விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதையும் படிக்க: கூட்டணி இல்லையென்றால் ஜெயித்திருக்க முடியுமா?”.. பேரவையில் திமுக-அதிமுக-காங்கிரஸ் இடையே காரசார விவாதம்!!

வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயல்:

இத்தீர்மானத்தை பேரவையில் முன்மொழிந்து பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், ஆசிரியர் பணி என்பது வெறும் அறிவைப் போதிக்கும் தொழில் மட்டுமல்லாமல், மனித வளத்தை உருவாக்கிச் சமூகத்தின் எதிர்காலத்தைச் செதுக்கும் உயரிய பொறுப்பாகும் என்று சுட்டிக்காட்டினார். பாடத்திட்டங்களை எளிமையாகக் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், நற்பண்புகள் மற்றும் ஒழுக்கத்தை வளர்த்தல், அத்துடன் மாணவர்களிடம் உள்ள தனித்துவமான திறமைகளை ஊக்கப்படுத்துதல் ஆகியவை ஆசிரியர்களின் தலையாய கடமையாகும். ஆனால், கடந்த 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தடையின்றிச் சிறப்பாகப் பணியாற்றி, தற்போது ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களைத் தகுதித் தேர்வு எழுத வற்புறுத்துவது அவர்களின் வாழ்வாதார உரிமையைப் பாதிக்கும் செயலாகும் என்று அமைச்சர் கவலை தெரிவித்தார்.

TET தேர்ச்சி பெற்றால் மட்டுமே பதவி உயர்வு:

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 23.08.2010 தேதியிட்ட அறிவிக்கையின்படியும், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படியும் ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வு (TET) கட்டாயமாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின் காரணமாக, தமிழ்நாட்டில் சுமார் 3,28,701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பதவி உயர்வு பெற முடியும் என்றும், இல்லையெனில் பணியிழப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் சீராய்வு மனு தீர்ப்பில், பணியில் உள்ள ஆசிரியர்கள் 31.08.2028-க்குள் TET தேர்ச்சி பெற வேண்டும் எனக் கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிடுவதால் புதிய தொழில் நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் – உதயநிதி ஸ்டாலின்..

பேரவை ஒருமனதாக வலியுறுத்தல்:

இந்த நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தில், 23.08.2010-க்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான நிரந்தர விலக்கு அளிக்குமாறு ஒன்றிய அரசைப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. மேலும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் பிரிவு 23-ல் உரிய சட்டத் திருத்தம் மேற்கொண்டு, NCTE வழியாக இது தொடர்பான தெளிவான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், இதன் மூலம் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தமிழ்நாடு சட்டமன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

Follow Us