சுட்டெரிக்கும் சூரியன்.. 105 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. வானிலை கொடுத்த எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: ஏப்ரல் 21ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும்.
வானிலை நிலவரம், ஏப்ரல் 16, 2026: தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை கடுமையாக உயர்ந்து பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 41°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூர் 40.4°C, திருச்சி 40.1°C, மதுரை 40.2°C, ஈரோடு 40°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், சேலம் 39.4°C, பாளையங்கோட்டை 38.4°C, நாமக்கல் 39.7°C, தர்மபுரி 39°C என பதிவாகியுள்ளது.
110 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயரக்கூடும்:
சென்னையைப் பொருத்தவரையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.7°C மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.0°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், இதே நிலை நீடிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்பு… ஜூலி மீது வழக்கு… பின்னணியில் நடந்தது என்ன!
மழைக்கு வாய்ப்பா?
இதே நேரத்தில், சுமார் 0.9 கிமீ உயரத்தில் தென்கிழக்கு மத்திய பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரை, வடக்கு உள் கர்நாடகா மற்றும் தமிழகம் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 21ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நீடிக்கும்.
மேலும் படிக்க: வீடு புகுந்து கல்லூரி மாணவிக்கு வெட்டு.. மீஞ்சூரில் போதை கும்பலின் அட்டூழியம்..
வானிலை கொடுத்த எச்சரிக்கை:
அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக, சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 38°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28°C ஆக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் தேவையற்ற வெளியே செல்லாமல் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.