Tamil Nadu Summer Rains: சென்னையில் 129% கோடை மழை.. இன்னும் மழைக்கு வாய்ப்பா..? IMD தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்!
Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னையில், கோடை மழை அளவு 129% அதிகரித்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த மூன்று மாதங்களில் 40°C க்கு மேல் வெப்பம் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரும்காலங்களில் கனமழை எச்சரிக்கை இல்லை என்றாலும், வானிலை அறிக்கைகளை கவனிப்பது அவசியம்.

சென்னை, மே 30: தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இது சுட்டெரிக்கும் கோடைக்காலம் (Summer) என்றாலும், கோடை மழையானது (Summer Rain) பல்வேறு இடங்களில் தனது பலத்தை காட்டி வருகிறது. தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மிக தீவிரமாக உள்ளது. அதன்படி கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், விருதுநகர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. சமீபகாலமாக, தலைநகர் சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்தநிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, சென்னையில் கோடை மழையானது 129% அதிகமாக பெய்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) தீவிரமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரம்:
கோடைக்காலத்தில் பெய்து வரும் ம்ழை குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா இன்று அதாவது 2025 மே 31ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் கடந்த 3 மாதங்களில் ஒருநாள் கூட 40° மேல் வெப்பம் பதிவாகவில்லை. ஈரோட்டில் மட்டும் இதுவரை அதிகபட்சமாக 41.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வேலூரில் 2025 மே 4 மற்றும் 7ம் தேதிகளில் 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.




மதுரை விமான நிலையத்தில் 2015 மே 13 மற்றும் 14ம் தேதிகளில் 41 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 2025 மே 4 மற்றும் 5ம் தேதிகளில் 39.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. இப்போது கொடுக்கப்பட்டுள்ள தரவுகள், கடந்த 5 ஆண்டுகளில் ஏதோ ஒரு நாட்களில் சென்னையில் 40 டிகிரி மற்றும் 41 டிகிரி என்று இருந்தது. ஆனால், இந்த முறை சென்னையில் ஒருநாள் கூட 40 டிகிரி செல்சியஸை தொடவில்லை.
சென்னை வானிலை மையத்தின் ட்விட்டர் பதிவு:
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 31, 2025
சென்னையில் கோடை மழையானது 129 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. சென்னையை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் 11 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக கோடை மழை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களில் கோடை மழை 25 செ.மீ பெய்துள்ளது. 2025 மார்ச் முதல் மே வரையிலான காலக்கட்டத்தில் கோடை மழை இயல்பை விட 97 சதவீதம் அதிகமாக பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் சுமார் 6 செ.மீ. மழையும், கோவை, நீலகிரி, தென்காசி, குமரி மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களிலும் மழையானது பதிவாகியுள்ளது. இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை என்று எதுவும் இல்லை. தென்மேற்கு பருவமழை நாளை அதாவது ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை தான் கணக்கில் கொள்ளப்படும். தமிழ்நாட்டுக்கு 33% மழை இருக்கும் நிலையில் இந்த முறை 110% மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.