Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை: எண்ணூரில் வீடுகளின் நிறமே மாறிய அவலம்.. காரணம் என்ன?

Chennai Ennore Dust Pollution: எண்ணூர் தனியார் ரசாயன ஆலையின் தூசி மாசு காரணமாக சத்யவாணி முத்துநகர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகள், வாகனங்கள் தூசியால் மூடப்பட்டுள்ளன. தொண்டை எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன. ஆலை நிர்வாகம் தங்களது செயல்பாட்டில் எந்த தவறும் இல்லை என மறுத்துள்ளது.

சென்னை: எண்ணூரில் வீடுகளின் நிறமே மாறிய அவலம்.. காரணம் என்ன?
சத்யவாணி முத்துநகரில் வீடுகள், வாகனங்கள் தூசியால் சேதம் Image Source: x
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 31 May 2025 15:08 PM

சென்னை மே 31: சென்னை எண்ணூரில் (Chennai Ennore) செயல்பட்டு வரும் தனியார் ரசாயன ஆலையில் இருந்து வெளியேறும் தூசு காரணமாக, சத்யவாணி முத்துநகரின் வீடுகள், வாகனங்கள் மற்றும் மரச்செடிகள் அனைத்தும் தூசால் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக அந்த பகுதியின் முதலாவது தெருவில் உள்ள வீடுகளின் மொட்டை மாடிகள், சுவர்கள் போன்றவை முழுமையாக தூசில் மூடப்பட்டுள்ளதால், வீடுகளின் இயல்பு நிறமே மாறிவிட்டது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எண்ணூரில் தூசு மாசு பொதுமக்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கான காரணத்தைப் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

சத்யவாணி முத்துநகரில் வீடுகள், வாகனங்கள் தூசியால் சேதம்

பொதுமக்களின் கூற்றுப்படி, அந்த தூசு, அப்பகுதியில் இயங்கும் தனியார் ரசாயன ஆலையிலிருந்துதான் வெளியேறுவதாக தெரிவித்துள்ளனர். தொடக்கத்தில் லாரி போக்குவரத்தினால் தூசு ஏற்பட்டதாக எண்ணியவர்கள், பின்னர் மாசு ரசாயன ஆலையிலிருந்து வந்ததென்பது தெளிவானதாக கூறுகின்றனர். இதனால் தொண்டை எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற உடல் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

18 தெருக்களிலும் தூசு பாதிப்பு

அருள்மொழி என்ற பெண், “மே மாதம் முழுவதும் வீடுகளில் தூசு படிந்ததை கவனித்தேன். கடந்த 2025 மே 27-ஆம் தேதி இரவு முதல் 28-ஆம் தேதி காலை வரை தூசு அதிகமாக இருந்தது. சத்யவாணி முத்துநகரில் 18 தெருக்களில் வீடுகளைக் குழுமமாக பார்வையிட்டு, தூசு படிந்துள்ள நிலையை உறுதி செய்தேன்” என்றார்.

எண்ணூர் குடியிருப்பாளர்கள் தூசி மாசுபாடு குறித்து புகார்

தொடர் தூசு – அடிக்கடி துடைக்க வேண்டிய அவலம்

மந்தாரி என்ற மற்றொரு பெண் கூறுகையில், “தரையில் அடிக்கடி தூசுப்படுவதால், அதை அடிக்கடி துடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜன்னலையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நடவடிக்கை

பொதுமக்களின் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தூசு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ளதுடன், அந்த பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் கடுமையாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தின் மறுப்பு

இதனிடையே, புகாரில் குற்றம் சாட்டப்பட்ட தனியார் நிறுவனம், “வீடுகளில் தூசு படிந்து இருப்பதற்கான காரணம் எங்களது ஆலையிலிருந்து வெளியேறிய தூசு என நிரூபணமாகவில்லை. எங்களது ஆலையில் உரம் தயாரிப்பு மற்றும் பேக்கிங் மட்டுமே நடைபெறுகிறது. தூசை கட்டுப்படுத்தும் உபகரணங்களும் முறையாக செயல்பட்டு வருகின்றன. மக்கள் நலனுக்கு எதிராக எப்போதும் செயல்படமாட்டோம்” என விளக்கம் அளித்துள்ளது.

எண்ணூரில் தூசு மாசு பொதுமக்களுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கான காரணத்தைப் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில், மக்கள் நலனை கருதி தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.