வேகமாகக் குறையும் பிறப்பு விகிதம்..! ‘முதியோர் மாநிலமாக’ மாறும் தமிழ்நாடு.. அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்!!
Tamilnadu elderly population: பிறப்பு விகிதம் 1.3 ஆகக் சரிந்ததால் தமிழ்நாடு வேகமாக முதியோர் மாநிலமாக மாறி வருவதாகத் தேசிய மக்கள்தொகை ஆணையத் தரவுகள் தெரிவிக்கின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் 5-ல் ஒருவர் முதியவர் என்ற நிலை உருவாகும் என்றும், இது அரசின் ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் செலவினங்களுக்கு பெரும் சவாலாக அமையும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சென்னை, ஆகஸ்ட் 19: தமிழ்நாட்டின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பையே தலைகீழாகப் புரட்டிப் போடக்கூடிய ஒரு மிகப்பெரிய மக்கள்தொகை மாற்றம் மாநிலத்தில் அமைதியாக அரங்கேறி வருகிறது. பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்து வருவது மற்றும் மேம்பட்ட மருத்துவ வசதிகள் காரணமாக மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவது ஆகிய இரு முக்கிய காரணங்களால் தமிழ்நாடு படிப்படியாக முதியோர்கள் அதிகம் வாழும் மாநிலமாக உருவெடுத்து வருகிறது. தேசிய மக்கள்தொகை ஆணையம் மற்றும் குடும்ப நல இயக்ககம் வெளியிட்டுள்ள தரவுகள், எதிர்காலத்தில் மாநிலம் எதிர்கொள்ளவுள்ள சவால்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
இதையும் படிக்க: முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!
குழந்தைகளின் எண்ணிக்கை சுருங்கும்:
தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் கணக்கீட்டின்படி, கடந்த 2011-ஆம் ஆண்டில் 7.2 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள்தொகை, 2026-ஆம் ஆண்டில் 7.7 கோடியாகவும், 2036-ஆம் ஆண்டில் 7.8 கோடியாகவும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், 1971-ஆம் ஆண்டில் ஒரு பெண்ணிற்கு சராசரியாக 3.9 ஆக இருந்த மகப்பேறு/பிறப்பு விகிதம், தற்போது 1.3 ஆகக் கடுமையாகச் சரிந்துள்ளது. இதன் விளைவாக, 2011-ஆம் ஆண்டில் 23.6 சதவீதமாக இருந்த குழந்தைகளின் எண்ணிக்கை, 2036-ஆம் ஆண்டில் 15.6 சதவீதமாகச் சுருங்கும் என எச்சரிக்கப்படுகிறது.
உழைக்கும் பிரிவினரின் பங்களிப்பு குறையும்:
மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு வித்திடும் 15 முதல் 59 வயது வரையிலான உழைக்கும் பிரிவினரின் பங்களிப்பும் 65.8 சதவீதத்திலிருந்து 63.6 சதவீதமாகக் குறையும் சூழல் உருவாகியுள்ளது. மாறாக, 60 வயதைக் கடந்த முதியோரின் எண்ணிக்கை 2011-ல் இருந்த 10.6 சதவீதத்திலிருந்து, 2036-ல் 20.8 சதவீதமாக இரட்டிப்பாகும் எனத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. தற்போது தமிழ்நாட்டின் மக்கள்தொகையில் 100 பேரில் 16 பேர் 60 வயதைக் கடந்த முதியோராக உள்ள நிலையில், அடுத்த பத்தே ஆண்டுகளில் ஐந்து பேரில் ஒருவர் முதியவர் என்னும் நிலையைத் தமிழ்நாடு அடையும் என குடும்ப நல இயக்ககம் கவலை தெரிவிக்கிறது.
முதியோர்களின் விகிதம் அதிகரிக்கும்:
இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 2036-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிறரைச் சார்ந்து வாழும் முதியோர்களின் விகிதம் 32.7 சதவீதமாக அதிகரிக்கும். இந்திய அளவில் கேரளாவிற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இதில் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உழைக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் இந்த மக்கள்தொகை மாற்றம், மாநில அரசின் ஓய்வூதியம் மற்றும் மருத்துவச் செலவினங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துவதுடன், எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் சவாலாக அமையும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதையும் படிக்க: ”கண் முன் வந்த கரூர் சம்பவம்!”.. மாநாட்டில் 3 நிமிடத்தில் உரையை முடித்தது ஏன்? திருமாவளவன் உருக்கமான விளக்கம்!!
நிதிநிலைத்தன்மைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை:
இந்த மக்கள் தொகை மாற்றம் அரசின் நிதிநிலைத்தன்மைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான மாநில அரசின் வெள்ளை அறிக்கையின்படி, அதிகரித்து வரும் முதியோர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் தேவைகள், மாநிலத்தின் கடன் சுமையை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வரி செலுத்தும் உழைக்கும் வர்க்கத்தினர் குறையும் அதே வேளையில், அரசின் நலத்திட்டங்களைச் சார்ந்து வாழும் முதியோர்களின் எண்ணிக்கை உயர்வது வருவாய் பற்றாக்குறையைத் தீவிரப்படுத்தும். எனவே, முதியோர்களுக்கான பிரத்யேக சுகாதாரக் கட்டமைப்பு, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் முதியோர் நலக் கொள்கைகளில் அரசு இப்போதே நீண்டகால முதலீடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.