ஆர்டிஐ சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த உத்தரவு ரத்து: விமர்சனங்களுக்கு மத்தியில் தமிழக அரசு நடவடிக்கை
மனிதவள மேலாண்மைத் துறையின் (R) கீழ் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 57 ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24(4)-ன் கீழ் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு விலக்கு அளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டிருந்தது. எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாணை எண் 57 ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை மீண்டும் ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிற்குள் தொடர்கிறது.
செப்டம்பர் 27, 2026: தமிழகத்தில் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையை தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI), 2005-ன் கீழ் விலக்கு அளித்து தமிழக வெற்றி கழக அரசு பிறப்பித்த உத்தரவை தற்போது ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அரசு தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளது.
ரத்து செய்யப்பட்ட அரசாணை:
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மனிதவள மேலாண்மைத் துறையின் (R) கீழ் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை எண் 57 ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 24(4)-ன் கீழ் பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறைக்கு விலக்கு அளித்து இந்த அரசாணை வெளியிடப்பட்டிருந்தது.
துப்பாக்கிச்சூடு, லாக்அப் டெத், சித்ரவதை:
பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறையின் கீழ் காவல்துறை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகள், காவல் மரணங்கள், காவல்துறை சித்ரவதை, காவலில் ஏற்படும் மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் கையாளப்படுகின்றன. மேலும், சமூக மற்றும் சாதி மோதல்கள், பாதுகாப்பு தொடர்பான தடுப்புக்காவல் விவகாரங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை திரும்பப் பெறுவது தொடர்பான கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களும் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.
மேலும் படிக்க: “சினிமாவை மிஞ்சும் த்ரில் சேஸிங்!”.. காரின் மேற்கூரையில் தொங்கியபடி 40 கி.மீ பயணம் செய்த தலைமை காவலர்.. கோவையில் ஷாக் சம்பவம்!!
முந்தைய அரசாணை அமல்படுத்தப்பட்டிருந்தால், இதுபோன்ற முக்கிய தகவல்களை பொதுமக்கள் ஆர்டிஐ மூலம் பெறுவதில் கட்டுப்பாடுகள் ஏற்பட்டிருக்கும் என எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.
அமைச்சர் சொன்ன விளக்கமும் – எழுந்த எதிர்ப்புகள்:
இதுகுறித்து தமிழக வெற்றி கழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் ஆர்டிஐ மூலம் அதிகளவில் தகவல்கள் கோரப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கம் அளித்திருந்தார். சட்டம் மற்றும் ஒழுங்கு துறையில் 20 பிரிவுகள் உள்ள நிலையில், குறிப்பிட்ட சில பிரிவுகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். இருப்பினும், பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தால் முதலமைச்சரிடம் எடுத்துச் சென்று மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரமும், ஆர்டிஐ சட்டம் ஜனநாயகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட முக்கியமான சட்டம் எனக் குறிப்பிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கு துறைக்கு விலக்கு அளிக்கும் நடவடிக்கை வெளிப்படையான நிர்வாகத்திற்கு உகந்ததல்ல என விமர்சித்திருந்தார்.
மேலும் படிக்க: இரவுப் பணி முடிந்து வந்த செவிலியர் மாயம்.. முட்புதரில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி!!
அதேவேளை, அமைச்சர் ராஜ் மோகன், இந்த உத்தரவு கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை பாதிக்காது என்றும், ஊடகங்களுக்கு தேவையான தகவல்கள் வழங்கப்படும் என்றும் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், எழுந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் அரசாணை எண் 57 ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது (சட்டம் மற்றும் ஒழுங்கு) துறை மீண்டும் ஆர்டிஐ சட்டத்தின் வரம்பிற்குள் தொடர்கிறது.