தரம் தாழ்ந்த செயல்கள் மூலம் சட்டமன்றத்தின் மாண்பை பாதிக்கும் முதல்வர்.. தலைமை பண்பும் கிடையாது – மேயர் பிரியா காட்டம்..
Mayor Priya Slams CM Vijay: நகரின் வளர்ச்சிக்கு முக்கியமான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது சரியான நடவடிக்கை அல்ல என்றும், “இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது” என்ற பழமொழிக்கு ஏற்ப அரசு செயல்படுவதாகவும் தெரிவித்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளும் கேள்விக்குறியாக உள்ளதாக மேயர் பிரியா கூறினார்.
செப்டம்பர் 25, 2026: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியதும் மேயர் பிரியா உரையாற்றினார். அப்போது, நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சை மேற்கோள் காட்டி, “மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவரிடம் தமிழ்நாடு சிக்கியுள்ளது” என முதலமைச்சர் விஜய்யை விமர்சித்தார். தமிழ்நாடு சட்டமன்றம், பக்தவச்சலம் தொடங்கி முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை பல வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர்களைக் கொண்டிருந்ததாக குறிப்பிட்ட மேயர் பிரியா, தற்போது சட்டமன்றத்தின் மாண்பு குறைந்து வருவதாக குற்றம்சாட்டினார்.
முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த மேயர் பிரியா:
முதலமைச்சர் விஜய் தனது உடல்மொழி, செயல்பாடுகள் மற்றும் தரம் தாழ்ந்த செயல்கள் மூலம் சட்டமன்றத்தின் மாண்பை பாதிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்தார். முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிசா கைது தொடர்பான அவரது தியாகத்தை இழிவுபடுத்தும் வகையில் முதலமைச்சர் விஜய் பேசியதாகக் கூறிய மேயர் பிரியா, அதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்வதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: “திமுக ஆட்சியில் ஏன் உரிய விசாரணை நடத்தவில்லை?”.. ஜெம் வீரமணி வழக்கில் சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி!
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் முன்வைக்கும் கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் உரிய பதில் அளிக்காமல், சம்பந்தமில்லாத கருத்துகளை தெரிவித்து விவாதத்தை திசைதிருப்புவதாகவும் குற்றம்சாட்டினார். சட்டமன்றத்தில் வாதத் திறமையுடன் ஆளுங்கட்சியை திணறடிக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
தவெக அரசு – நிர்வாக சீர்கேடு:
தவெக அரசு பொறுப்பேற்ற நான்கு மாதங்களில் பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்தடை, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள், கொலை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மேயர் பிரியா கூறினார். குறிப்பாக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்தடை காரணமாக மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் மின்தடை குறித்து கேள்வி எழுப்பும்போது, மழை பெய்யவில்லை, காற்று அடிக்கவில்லை என அமைச்சர் பதிலளிப்பதாகவும், இது நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்துவதாகவும் விமர்சித்தார்.
மேலும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு.. சிபிஐ அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.. நீதிமன்றம் அதிரடி!!
தலைமை பண்பு இல்லாத முதல்வர்:
மேலும், நகரின் வளர்ச்சிக்கு முக்கியமான பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவது சரியான நடவடிக்கை அல்ல என்றும், “இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படுவது” என்ற பழமொழிக்கு ஏற்ப அரசு செயல்படுவதாகவும் தெரிவித்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது தொடர்பான நடவடிக்கைகளும் கேள்விக்குறியாக உள்ளதாக மேயர் பிரியா கூறினார்.
தலைமைப் பண்பு என்பது பிரச்சினைகள் ஏற்படும் போது மற்றவர்கள் மீது பழி சுமத்துவது அல்ல என்றும், கொள்கைகளை உணர்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே தலைமைப் பண்பு என்றும் அவர் தெரிவித்தார்.