AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.30க்கு சன்ன ரக அரிசி: சென்னையில் 30 அங்காடிகளில் இன்று முதல் விற்பனை

Tamil Nadu Rice Sale : சன்ன ரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30 என்ற விலையில் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.30க்கு சன்ன ரக அரிசி: சென்னையில் 30 அங்காடிகளில் இன்று முதல் விற்பனை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Oct 2026 21:27 PM IST

சென்னை, அக்டோபர் 17 : சன்ன ரக அரிசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30 என்ற விலையில் அரிசி விற்பனை செய்யும் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது. சென்னையில் (Chennai) அக்டோபர் 17, 2026 இன்று முதல் விற்பனை தொடங்கியுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் நாளை முதல் படிப்படியாக விரிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.30க்கு சன்ன ரக அரிசி

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் இந்த விற்பனையைத் தொடங்கி வைத்தனர். சென்னையைப் பொறுத்தவரை, 11 அமுதம் அங்காடிகள், 19 கூட்டுறவு அங்காடிகள் என மொத்தம் 30 இடங்களில் அக்டோபர் 17, 2026 இன்று முதல் கிலோ ரூ.30-க்கு சன்ன ரக அரிசி கிடைக்கும்.

இதையும் படிக்க : பருவமழை தீவிரம்: “தமிழகம் முழுவதும் அடுத்த 2 மாதங்களுக்கு தீவிர நோய் தடுப்பு நடவடிக்கை”.. சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு!!

மாநிலம் முழுவதும் 250 அங்காடிகள்

முதற்கட்டமாக, மாநிலம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் 201 அங்காடிகள், 49 அமுதம் அங்காடிகள் என மொத்தம் 250 அங்காடிகள் மூலம் 25,000 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசியை விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக, தனியார் அரிசி ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களிலிருந்து அரசு அரிசியைக் கொள்முதல் செய்துள்ளது. பொதுமக்களின் தேவையைப் பொறுத்து, ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 5 கிலோ வரை அரிசி வழங்கப்படும். அதிகமானோர் பயன்பெறும் வகையில் இந்த அளவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி, நியாயமான விலையில் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம், வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் அரிசி விலையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த நியாய விலைக் கடைகளில் கிலோ ரூ.35க்கு வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தையும் அரசு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை – தமிழக அரசு அறிவிப்பு

வழக்கமாக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு மாதத்தின் 3வது மற்றும் 4வது ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை தினங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அக்டோபர் 19, 2026 மற்றும் அக்டோபர் 20, 2026 விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு ரேசன் கடைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக 3வது ஞாயிற்றுக்கிழமையான அக்டோபர் 18, 2026 நாளை ரேசன் கடைகள் வழக்கம் போல செயல்படும் என உணவு வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நாளுக்கு ஈடு செய்யும் வகையில் நவம்பர் 21, 2026 அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us